இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோரின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


சூரி பாயலா என்பவர் தான் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், கடந்த 2023ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2- தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட 2024 மார்ச் 14ம் தேதி உத்தரவையும், ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராகவும், விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்ட 2025 பிப்ரவரி 17ம் தேதி உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
2024ம் ஆண்டு இரண்டு தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியான நிலையில், தேடல் குழு ஒவ்வொரு பணியிடத்துக்கும் தலா 5 பேர் என மொத்தம் 10 பேர் கொண்ட பட்டியலை பரிந்துரைக்க வேண்டும் என சட்டம் கூறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6 பேர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டதாகவும், அதே நாளில் தேர்வுக் குழு ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்துவை தேர்வு செய்ததாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தேர்தல் நிர்வாகம் மற்றும் தேர்தல் நடத்துவதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்ட விதியும் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டு ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராகவும், அவருக்கு பதிலாக விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டபோதும் புதிய தேர்வு நடைமுறை மற்றும் புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேடல் குழு மற்றும் தேர்வுக் குழு கூட்டங்களின் ஆவணங்களை தாக்கல் செய்யவும் மனுதாரர் கோரியுள்ளார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செப்டம்பர் 27 மற்றும் அக்டோபர் 2ம் தேதிகளில் கோரிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் தங்களது பதவிகளில் தொடர சட்டப்பூர்வ அதிகாரம் என்ன என்பதை விளக்க உத்தரவிடும் கியூ வாரண்டோ உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும், அவர்களது நியமனங்கள் சட்டவிரோதமானவை என நீதிமன்றம் கருதினால் அந்த பதவிகளை காலியாக உள்ளது என்று அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலையில் பள்ளமா? போட்டோ எடுத்தால் போதும்! AI மூலம் சாலைகளை சரிசெய்யும் 16 வயது டெல்லி மாணவர்
