Homeசெய்திகள்தமிழ்நாடுகாதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகப் பொய்யான குற்றச்சாட்டு? முத்துக்குமரன் காவல் ஆணையரிடம் புகார்

காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதாகப் பொய்யான குற்றச்சாட்டு? முத்துக்குமரன் காவல் ஆணையரிடம் புகார்

-

- Advertisement -

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி அவதூறு ஏற்படுத்தியதாகக் கூறி, வஹீதா பேகம் என்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

we-r-hiring

சென்னை விருகம்பாக்கம், நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (28), தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பிரபலமாக இருந்து வருகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலம் தனக்குக் கிடைத்துள்ள பொதுமக்களின் ஆதரவும், நற்பெயரும் தனது தொழில் மற்றும் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானவை ஒன்று என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வரும் பொருளாகவும் இருப்பது என்னை பற்றி வஹீதா பேகம் என்ற பெண், அவருடன் தனக்குப் பழக்கம் இருந்ததாகவும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

தங்களுக்குள் இருந்தது வெறும் நட்பு மட்டுமே என்றும், அந்தப் பெண்ணிடம் தான் காதலைத் தெரிவித்ததோ, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததோ இல்லை என்றும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்களாகப் பழகிய காலத்தில் இருவரும் இயல்பாகவும், நகைச்சுவையாகவும் பேசியதாகவும், அந்த உரையாடல்களில் சில வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேச்சுகள் அனைத்தும் விளையாட்டாகவும், நகைச்சுவையாகவும் நடைபெற்றவை என்றும், அவற்றைத் தீவிரமான காதல் உரையாடல்களாக இருவரும் கருதவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், வஹீதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு வீடியோ ரீல்களை வெளியிட்டதாகவும், அவற்றில் முழு உரையாடல்களையும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் முத்துக்குமரன் குற்றம்சாட்டியுள்ளார்.

வஹீதா பேகம் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் அவற்றுடன் இடம்பெற்ற பதிவுகள் மூலம், தான் காதலிப்பதாகக் கூறி அவருக்கு நம்பிக்கை அளித்ததாகவும், முந்தைய காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த அவரிடம் நெருக்கமாகப் பழகி பின்னர் ஏமாற்றியதாகவும் பொய்யாக குற்றம்சாட்டப்படுவதாக முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருக்கு மனரீதியாகத் துன்பம் ஏற்படுத்தியதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்திற்குத் தானே காரணம் எனவும் தன்னைப் பற்றித் தவறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தங்களுக்குள் நடந்த நகைச்சுவையான உரையாடல்களைத் தவறான நோக்கத்துடன் சித்தரித்து, பொதுமக்கள் தன்னைப் பற்றி தவறாக நினைக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

வஹீதா பேகம் வெளியிட்ட வீடியோவின் பதிவில், தான் பேசியது விளையாட்டாகத்தான் என்றும், தங்களுக்குள் நடந்த உரையாடல்கள் நகைச்சுவையானவை என்பதை அவரே குறிப்பிட்டுள்ள நிலையில், அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, தான் காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியதற்கான ஆதாரம்போல் வெளியிட்டுள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனால், முழு உரையாடலின் பின்னணியை அறியாத பொதுமக்கள் தன்னைத் தவறாகப் புரிந்துகொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 08.10.2026 அன்று வஹீதா பேகத்துடன் அலைபேசியில் பேசியபோது, தனது நடத்தையால் ஏற்பட்ட எரிச்சல் காரணமாகவே அந்த வீடியோக்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்ததாக முத்துக்குமரன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் வஹீதா பேகத்தின் காதலர் இல்லை என்றும், இதற்கு முன்பும் காதலராக இருந்ததில்லை என்றும் அந்த உரையாடலில் அவர் ஒப்புக்கொண்டதாக முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதற்கு இந்த உரையாடல் முக்கிய ஆதாரமாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அலைபேசி உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்களை விசாரணையில் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தனது பெயர், முகம் மற்றும் குரல் தெளிவாகத் தெரியும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளதால், அவற்றைப் பார்ப்பவர்கள் தன்னை எளிதில் அடையாளம் கண்டுகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் தனது நற்பெயர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தன்னை ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பயன்படுத்தி ஏமாற்றிய நபராகவும், அவரது தற்கொலை முயற்சிக்குக் காரணமானவராகவும் சித்தரிப்பது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையைப் பாதிப்பதாகவும், இதனால் மன உளைச்சல், அவமானம் மற்றும் மனவேதனை ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகக் குற்றம்சாட்டப்படும் வஹீதா பேகம் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என முத்துக்குமரன் கோரியுள்ளார்.

மேலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவற்றின் அசல் பதிவுகள், கணக்கு விவரங்கள் மற்றும் பதிவேற்றம் தொடர்பான தகவல்களை ஆதாரங்களாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் பற்றி மேலும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுத்திய விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் முத்துக்குமரன் வலியுறுத்தியுள்ளார்.

“எங்கள் எதிர்காலத்தை நாங்களே தீர்மானிப்போம்; நீங்கள் தீர்மானிக்க முடியாது!” – எலான் மஸ்க்குக்கு கமல்ஹாசன் பதிலடி

MUST READ