திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொலைச் சதித் திட்டம் தீட்ட வந்ததாகச் சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாகனத் தணிக்கையில் சிக்கிய இரண்டு கார்கள்

திருத்துறைப்பூண்டி பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த இரண்டு கார்களை நிறுத்திச் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இரண்டு கார்களில் இருந்த 7 பேரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
5 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவை
விசாரணையில், கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலைச் சதித் திட்டம் குறித்து விசாரணை தீவிரம்
வேறொரு நபரைக் கொலை செய்வதற்கான திட்டத்துடன், திருத்துறைப்பூண்டியில் உள்ள கூட்டாளி ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அவர்கள் அங்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் யாரைக் குறிவைத்துக் கொலைச் சதித் திட்டம் தீட்டினர், இதன் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கைப்பற்றப்பட்ட துப்பாக்கி எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது வண்ணாரப்பேட்டையில் 80 சவரன் நகை கொள்ளை: ராஜஸ்தானில் பதுங்கியிருந்த இருவர் கைது!
