தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 30 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இரும்புப் பீரோவில் வைத்திருந்த சில்லறைக் காசுகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக வீட்டின் உரிமையாளர் வேதனை தெரிவித்துள்ளார்.

வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற தம்பதி
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள புளியம்பேட்டை ராஜலட்சுமி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை மண்டபத்தில் ஆண்களுக்கான அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று காலை கார்த்திக்கும் அவரது மனைவியும் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். பின்னர், மதியம் சுமார் 2 மணியளவில் கார்த்திக்கின் மனைவி வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறக்க முயன்றபோது, கதவு உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து தனது கணவர் கார்த்திக்குக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
பீரோவை உடைத்து நகை, பணம் கொள்ளை
தகவலறிந்து விரைந்து வந்த கார்த்திக்கும் அவரது மனைவியும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த இரும்புப் பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருந்தனர்.
மேலும், பீரோவில் வைத்திருந்த சில்லறைக் காசுகளையும் கொள்ளையர்கள் விட்டுவைக்காமல் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கைரேகைகள் பதிவு; சிசிடிவி காட்சிகள் ஆய்வு
கொள்ளைச் சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு நபர்கள் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்சிகளின் அடிப்படையில், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை அடையாளம் காணவும் அவர்களைப் பிடிக்கவும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவிடைமருதூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
