விழுப்புரம் மாவட்டத்தில் வெண்டைக்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெண்டைக்காயைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அத்தியூர் திருக்கை, பிடாகம், கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வெண்டை விவசாயிகள் தங்களது விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மஞ்சள் நிறத்தில் மாறிய வெண்டைக்காய்!
விவசாயிகள் பயிரிட்ட வெண்டைக்காய்கள் வழக்கமான பச்சை நிறத்துக்குப் பதிலாக மஞ்சள் நிறத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தையில் அவற்றை விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, ஒரு கிலோ வெண்டைக்காயைக் கூட ரூ.5-க்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
வெண்டை விதையால் இழப்பு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு!
‘வெற்றி’ என்ற பெயரிலான வெண்டை விதையைப் பயன்படுத்தியதால்தான் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் மாறி, தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
ஏக்கருக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்து வெண்டை பயிரிட்டும், உரிய வருமானம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, தங்களது பாதிப்பை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், ஆட்சியர் அலுவலகம் முன்பாக வெண்டைக்காயைக் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத் தகராறில் 6 வயது மகனைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தந்தை கைது!
