சென்னை ஆர்.கே. நகர் பகுதியில் 200 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, ஆர்.கே. நகர் தொகுதியில் முதன்முறையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


தண்டையார்பேட்டை கேப்டன் மஹால் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கர்ப்பிணிப் பெண்களுக்கு அமைச்சர் மரிய வில்சன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் ஆகியோர் நலங்கு வைத்து, கைகளில் வளையல் அணிவித்து, பன்னீர் தெளித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற 200 கர்ப்பிணிப் பெண்களுக்கும் பிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள், பவுடர் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதய அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்ட பெற்றோர்
நிகழ்ச்சிக்கு முன்னதாக, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் – மாலினி தம்பதியினர் தங்களது மூன்று மாத பெண் குழந்தையை அமைச்சரிடம் வழங்கினர். குழந்தைக்கு இதய நோய் இருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு ரூ.6 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறிய அவர்கள், சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
அப்போது அமைச்சர் மரிய வில்சன் தனது சட்டைப் பையில் இருந்த ஜெபமாலையை எடுத்து குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்து, “எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆர்.கே. நகர் மக்களுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் முன்னிலையில் 200 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மகிழ்ச்சியுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஆர்.கே. நகரில் முதன்முறையாக இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தனது வீட்டில் பெண் குழந்தைகள் இல்லாத நிலையில், ஒரே நேரத்தில் 200 பெண்களுக்கு வளைகாப்பு செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் பகுதியில் மக்களுக்குத் தேவையான அடுத்தகட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், குழந்தைகள் நல மருத்துவமனைகள் அதிக அளவில் தேவைப்படுவதாகக் கூறினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் ஆலோசித்து, முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பெரம்பூர் பகுதியில் ரூ.600 கோடி செலவில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் கூறினார். அதன் தொடர்ச்சியாக, தண்டையார்பேட்டை சின்ன ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது மூன்று மாடிகளுடன் செயல்பட்டு வரும் கட்டிடத்தை கூடுதலாக ஆறு மாடிகளுடன் விரிவுபடுத்தி, குழந்தைகள் நலப் பிரிவைச் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.
பெண்களின் வலிமை குறித்து நெகிழ்ச்சிப் பேச்சு
விழா மேடையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “ஆர்.கே. நகரில் இத்தனை தங்கைகளுக்கு வளைகாப்பு செய்வதற்காகத்தான் எனக்கு தங்கைகள் இல்லாமல் போய்விட்டார்களோ” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
கர்ப்பிணிப் பெண்கள் தங்களது உடல்நலத்தையும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தினருடனும் கணவருடனும் இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பெண்களின் வலிமை குறித்துப் பேசிய அவர், பெண்கள் மிகவும் வலிமையானவர்கள் என்றும், ஆண்களுக்கு நிகராக மட்டுமல்லாமல் அவர்களுக்கும் மேலான சக்தியாகப் பெண்கள் விளங்குவதாகவும் பாராட்டினார்.
மேலும், வளைகாப்பு நிகழ்ச்சியுடன் தனது பொறுப்பு முடிந்துவிடாது என்று கூறிய அமைச்சர், குழந்தை பிறந்த பிறகு தாய்மாமன் சார்பில் தங்க மோதிரம் வழங்குவது முதல், பிரீ-கேஜி சேர்க்கை தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை அண்ணனாக இருந்து உதவுவேன் என உறுதியளித்தார். இதற்குப் பெண்கள் தங்களுக்கு வாய்ப்பளித்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ஆர்.கே. நகர் மக்களிடையே தாம் ஒரு தத்துப் பிள்ளையாக மாறிவிட்டதாகக் கூறிய அவர், தங்களைக் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாகப் பேசினார்.
டிடிவி தினகரனுக்கு அமைச்சர் மரிய வில்சன் சவால்
தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறித்துப் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “ஸ்லீப்பர் செல், சிஸ்டமேட்டிக்” உள்ளிட்ட பல்வேறு அரசியல் சொற்களைப் பயன்படுத்தியவர் டிடிவி தினகரன்தான் என்று விமர்சித்தார்.
டிடிவி தினகரனை ஆர்.கே. நகர் தொகுதிக்கு வருமாறு தொடர்ந்து அழைத்து வருவதாகவும், ஆனால் அவர் வருவதில்லை என்றும் கூறினார். மேலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது பேசப்பட்ட 20 ரூபாய் நோட்டு விவகாரத்தை மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எந்தத் தார்மீக அடிப்படையில் டிடிவி தினகரன் பேசுகிறார்? ஆர்.கே. நகர் மக்களை ஏமாற்றிவிட்டு, அவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்யாமல் தப்பிச் சென்றவர் அவர். தவெக அரசைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதியே இல்லை. தைரியம் இருந்தால் ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரட்டும்” என்று அமைச்சர் மரிய வில்சன் கடுமையாக விமர்சித்தார்.
ஆர்.கே. நகரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் பெண்களின் நலன், மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொகுதி மக்களுக்கான உதவிகள் குறித்து பேசிய அமைச்சர், அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்தது நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.
சைத்தான் ஆட்சியில் நியாயம் கிடைக்காது : முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு காட்டம்!
