இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், கேரளாவில் பொதுப்பணித்துறைச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை (VACB) விசாரணை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்லா தெரிவித்துள்ளார்.


2006-ம் ஆண்டு சாலைத் திட்டம் தொடர்பான புகார்
கேரள மாநில போக்குவரத்துத் திட்டத்தின் கீழ், எம்.சி. சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றபோது முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. அப்போது பொதுப்பணித்துறைச் செயலராக இருந்த ஞானேஷ் குமார், ஒப்பந்தப் பணிகளுக்கான தொகையை விடுவிக்க ரூ.2 கோடி லஞ்சம் கேட்டதாக ஒப்பந்ததாரர் சாஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தத் திட்டத்தில் பணியாற்றிய மலேசியப் பொறியாளர் லீ சி பீன், 2005-ம் ஆண்டு மலேசியாவில் உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாகவும், லஞ்சக் கோரிக்கை மற்றும் பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைக்கு அனுமதி
இந்தப் புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்துவதற்கான அனுமதியைக் கோரியது. சட்ட ஆலோசனைக்குப் பிறகு, கேரள உள்துறை அனுமதி வழங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்பும், ஞானேஷ் குமார் பொதுப்பணித்துறைச் செயலராக இருந்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பணிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அப்போது குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி விசாரணை முடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிடைத்துள்ள புதிய புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை மேற்கொள்ளவுள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் நிரூபிக்கப்படாத நிலையில், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
குறிப்பு: ஞானேஷ் குமார் மீதானவை புகாரில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே; அவை விசாரணையில் நிரூபிக்கப்பட்டதாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
