பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, சர்ச்சைக்குரிய புத்தகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் கோவை பெரியார் அறிவுலக நூலகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டதாகவும், மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்திற்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நூலகங்களுக்கு அரசிடமிருந்து கிடைத்த கொள்முதல் ஆணைகளின் அடிப்படையிலேயே புத்தகங்களை விநியோகம் செய்ததாகக் கூறியுள்ளார்.
புத்தகங்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள யாரையும் தனக்குத் தெரியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், புத்தகங்களுக்கான கொள்முதல் ஆணைகள் கடந்த 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கிடைத்ததாகவும் மோகன் தெரிவித்துள்ளார்.
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் அரசியல் ரீதியாகப் பேசுபொருளாகியுள்ள நிலையில், பதிப்பக உரிமையாளரின் இந்த விளக்கம் கவனம் பெற்றுள்ளது.
