நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், தனது புதிய திரைப்படத்திற்குச் ‘சண்டியர்’ எனப் பெயரிட்டுள்ளதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த 2003ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படம் உருவாக்கப்பட்டபோது இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதாகவும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுரையை ஏற்று கமல்ஹாசன் அந்தப் பெயரைக் கைவிட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரைப் பயன்படுத்துவது சமூகங்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனக் கூறிய கிருஷ்ணசாமி, கமல்ஹாசன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பதால் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், ‘சண்டியர்’ என்ற தலைப்பே சாதிய மோதலையும் வெறுப்பையும் தூண்டக்கூடியதாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், படத்தின் தலைப்பைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தயாரிப்பாளர் சங்கத்தை நேரில் சந்தித்து வலியுறுத்தப் போவதாகக் கூறினார்.
இதற்குப் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நாடாளுமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட இடங்களில் முறையிடுவதுடன் சட்டரீதியாகவும் போராடுவோம் என்றார். மேலும், முதலமைச்சர் விஜய் கமல்ஹாசனை அழைத்து உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே விவகாரத்தில் தலையிட்டதைப் போல தற்போதைய அரசும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கமல்ஹாசனுக்குப் பின்னால் யாராவது தூண்டுதலாக இருக்கிறார்களா என்பது குறித்து காவல்துறையும், வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து ரா உளவு அமைப்பும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
‘சண்டியர்’ என்ற பெயரில் திரைப்படம் வெளியானால் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்த கிருஷ்ணசாமி, அந்தத் தலைப்பை அனுமதிக்க முடியாது என்றும் தனது எதிர்ப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.
