தூங்குவதையே ஒரு போட்டியாக மாற்றி, அதில் வெற்றி பெற்று ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் இலவச சொகுசு சுற்றுலாவையும் வென்றுள்ளார் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர். இந்த வினோதமான போட்டி குறித்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.


2 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்!
நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வித்தியாசமான போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட கடுமையான நேர்காணல்களுக்குப் பிறகு, வெறும் 10 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
சுமார் 60 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், பங்கேற்பாளர்களின் தினசரி தூக்க நேரம் மற்றும் தூக்கத்தின் தரம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது.
தூங்குவதில் மட்டுமல்ல… சுவாரசியமான சவால்களும்!
இந்தப் போட்டி வெறுமனே அதிக நேரம் தூங்குவதை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. திரைப்படக் காட்சிகளை தூங்கும் பாணியில் மாற்றுவது, உரையாடல்களுக்கு இடையே ‘தலையணை’, ‘பெட்ஷீட்’ போன்ற வார்த்தைகளை ரகசியமாகப் பயன்படுத்துவது எனப் பல்வேறு வாராந்திர சவால்களும் வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் பங்கேற்பாளர்கள் தங்களுக்குப் பிடித்த வகையில் ஏலம் எடுத்து அமைத்த படுக்கையறைகளில் தூங்க வைக்கப்பட்டனர்.
ரூ.9.63 லட்சம் பரிசு வென்ற ஜினியா!
இந்தப் போட்டியில் சிறந்த தூக்கப் புள்ளிகளைப் பெற்று மும்பையைச் சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.9 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கப் பரிசும், இலவச சொகுசு சுற்றுலாப் பயணத்திற்கான டிக்கெட்டும் வழங்கப்பட்டது.
தூங்குவதன் மூலம் இவ்வளவு பெரிய பரிசை வென்றுள்ள ஜினியா சாட்டர்ஜியின் சாதனை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த வினோதப் போட்டியின் அடுத்த சீசனுக்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளதாக போட்டியை நடத்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
