தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்குத் திரும்பி வருவதால் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள், தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களாக ரயில்கள், பேருந்துகள், கார்கள் மற்றும் விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை முடிவடைந்து, நாளை முதல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளன.
இதனால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் இன்று முதல் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக விமானங்கள் மூலம் திரும்பி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இன்று மாலை மற்றும் இரவு சென்னைக்கு வரும் பல விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணங்கள்!
பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களிலிருந்தும், டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட வடமாநில நகரங்களிலிருந்தும் சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.
வழக்கமான கட்டணம் – இன்றைய கட்டணம் ஒப்பீடு:
தூத்துக்குடி – சென்னை: ரூ.7,045-லிருந்து ரூ.17,639 ஆக உயர்வு.
மதுரை – சென்னை: ரூ.4,673-லிருந்து ரூ.11,877 ஆக உயர்வு.
திருச்சி – சென்னை: ரூ.4,954-லிருந்து ரூ.14,666 ஆக உயர்வு.
கோவை – சென்னை: ரூ.4,350-லிருந்து ரூ.6,870 ஆக உயர்வு.
சேலம் – சென்னை: ரூ.3,832-லிருந்து ரூ.13,098 ஆக உயர்வு.
டெல்லி – சென்னை: ரூ.10,167-லிருந்து ரூ.15,100 ஆக உயர்வு.
கொல்கத்தா – சென்னை: ரூ.7,681-லிருந்து ரூ.9,048 ஆக உயர்வு.
மும்பை – சென்னை: ரூ.6,160-லிருந்து ரூ.11,808 ஆக உயர்வு.
அகமதாபாத் – சென்னை: ரூ.7,470-லிருந்து ரூ.21,944 ஆக உயர்வு.
புவனேஸ்வர் – சென்னை: ரூ.7,199-லிருந்து ரூ.26,209 ஆக உயர்வு.
பணிக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் – கட்டண உயர்வால் தவிக்கும் பயணிகள்
விடுமுறை முடிந்து நாளை முதல் பணிக்குச் செல்ல வேண்டியிருப்பதால், விமானக் கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் வேறு வழியின்றி அதிக விலை கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்து பலரும் சென்னை திரும்பி வருகின்றனர்.
குறிப்பாக அகமதாபாத் மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களின் கட்டணங்கள் வழக்கமான கட்டணத்தை விடப் பல மடங்கு உயர்ந்துள்ளன.
பண்டிகை விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் அதிக அளவிலான பயணிகள் சென்னை திரும்புவதால் ஏற்பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வு, விமானப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
