Homeசெய்திகள்இந்தியாதீபாவளி கொண்டாட்டத்தில் தொடரும் சோகம்: வட மாநிலங்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் – 23 பேர்...

தீபாவளி கொண்டாட்டத்தில் தொடரும் சோகம்: வட மாநிலங்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் – 23 பேர் உயிரிழப்பு!

-

- Advertisement -

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், வட மாநிலங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தீ விபத்துகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ராஜஸ்தான், டெல்லி, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்ததுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

we-r-hiring

மத்தியப் பிரதேசத்தில் அதிக உயிரிழப்புகள்

தீ விபத்துகளின் பாதிப்பு மத்தியப் பிரதேசத்தில் அதிகமாக இருந்துள்ளது. அங்குள்ள இரண்டு மாவட்டங்களில் ஏற்பட்ட தனித்தனி தீ விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

கட்னி மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். தீயில் சிக்கியும், புகையால் மூச்சுத்திணறியும் அவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சியோனி மாவட்டத்தில் தங்க வியாபாரி ஒருவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், 16 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

மேலும், உஜ்ஜைனின் நாக்ஜிரி பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், மேல்தளத்தில் சிக்கியிருந்த 107 வயது முதியவர் உயிரிழந்தார்.

மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள எட்ஷி கிராமத்தில், மளிகைக் கடைக்கு மேல் அமைந்திருந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.

இதற்கிடையே, புனேவில் ஒரே இரவில் 63 இடங்களில் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. மும்பையின் லோகண்ட்வாலா பகுதியில் ஏற்பட்ட மற்றொரு தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மும்பையின் டோங்க்ரி பகுதியில் குடிசை வீடுகளும் கடைகளும் தீயில் எரிந்து சேதமடைந்தன. நாக்பூரில் உள்ள டிவிஎஸ் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீயில் எரிந்தன. தானேவில் 17 அடுக்குமாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டபோதிலும், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

ராஜஸ்தான் பட்டாசுக் கடையில் தீ: 2 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும், மூவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீ அருகிலிருந்த கடைகளுக்கும் பரவி, மூன்று கடைகள் மற்றும் பல இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

டெல்லியில் பட்டாசு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

தலைநகர் டெல்லியின் நரேலா பகுதியில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, ராக்கெட் வகை பட்டாசு ஒன்று 10 வயது சிறுவனின் வயிற்றில் நேரடியாகப் பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

பல மாநிலங்களில் தீ விபத்துகள்

உத்தரப் பிரதேச மாநிலம் பாந்தாவில் உள்ள பழைய பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் ரூ.20 முதல் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. காசியாபாத்தின் கிராஸிங்ஸ் ரிபப்ளிக் பகுதியிலும் தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

ஜம்முவின் நேரு சந்தையில் 12-க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எரிந்து அழிந்தன. அசாமின் ஜோனாய் மற்றும் சிக்கிமின் கேங்டாக் பகுதிகளிலும் தீ விபத்துகள் ஏற்பட்டன.

தீபாவளி கொண்டாட்டங்களின்போது பட்டாசுகளிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் மற்றும் மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் பல மாநிலங்களில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள், பண்டிகைக் காலங்களில் தீ பாதுகாப்பு மற்றும் பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்தியுள்ளன.

தீபாவளிக்குப் பின் கடுமையான நிலையை எட்டிய டெல்லி காற்றுத் தரம்: உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி விடிய விடிய வெடிக்கப்பட்ட பட்டாசுகள்!

MUST READ