Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குறுஞ்செய்தி புகார்: முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி...

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குறுஞ்செய்தி புகார்: முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி திபேன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அலுவலகத்திற்குச் சென்று தகாத முறையில் பேசியதாகவும் எழுந்துள்ள புகார் குறித்து முதலமைச்சர் விஜய் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திபேன் வலியுறுத்தியுள்ளார்.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குறுஞ்செய்தி புகார்: முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஹென்றி திபேன் வலியுறுத்தல்!

இந்தப் புகாரில் உண்மை இருந்தால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சிக்குள்ளும், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தலைமைச் செயலாளர் அல்லது டிஜிபி விளக்கம் அளிக்க வேண்டும்

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது வலைப்பக்கத்தில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று தகாத முறையில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய ஹென்றி திபேன், சம்பவம் நடைபெற்றதா, இல்லையா என்பது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பேசுவாரா, பேச மாட்டாரா என்பது தமக்கு முக்கியமல்ல என்றும், பெண் மாவட்ட ஆட்சியர் என்பதால் பல்வேறு காரணங்களுக்காக அவர் இந்த விவகாரத்தில் பேசாமல் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உண்மை எனில் எம்எல்ஏ மீது நடவடிக்கை அவசியம்

இத்தகைய புகார்கள் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்ட ஹென்றி திபேன், சமீபத்தில் பேராசிரியர் கலையரசன் கைது செய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர் மன்னிப்புக் கேட்ட சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

அந்த விவகாரத்தில் யார் புகார் அளித்தார் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.

தற்போதைய புகார் குறித்து முதலமைச்சர் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும், குற்றச்சாட்டு உண்மை எனத் தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சிக்குள்ளும், சட்டத்தின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பொறுப்பில் இருப்பவர்கள் தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அனுமதித்தால் அது தமிழ்க் கலாச்சாரத்துக்கு எதிரான நிலையை உருவாக்கும் என்றும், ஆளுங்கட்சியினர் மீதான இத்தகைய புகார்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

காவலர்களுக்குப் பணி பாதுகாப்பு வேண்டும்

தேனியில் காவலர் செந்தில்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் ஹென்றி திபேன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

காவல்துறையினருக்குப் பணி பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நேர்மையான ஆட்சி எனக் கூறப்படும் நிலையில், காவலர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களிலும் அரசு உரிய நடவடிக்கை எடுப்பதே அந்த ஆட்சியின் நேர்மைக்கான எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை; முதலமைச்சர் விஜய் பதவி விலக வேண்டும் – நைனார் நாகேந்திரன் காட்டம்!

MUST READ