ரூ.6.8 லட்சம் பெற்று வேறு நபர்களுக்கு வீட்டை ஒப்படைத்ததாகப் புகார் – ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தகவல்
சென்னை பெரவள்ளூர் பகுதியில் வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறி ரூ.2.8 லட்சம் மோசடி செய்ததாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திருமணமான புதிதில் வீடு தேடிய விவேக்!
சென்னை பெரம்பூர் செங்கல்வராயன் தெருவில் வசித்து வரும் விவேக் என்பவர், கடந்த 2023ஆம் ஆண்டு திருமணமான புதிதில் குடும்பத்துடன் வசிப்பதற்காக வீடு லீசுக்கு தேடி வந்துள்ளார்.
அப்போது, சென்னை ஜி.கே.எம். காலனி, வ.உ.சி. 5வது தெருவில் உள்ள வீட்டின் உரிமையாளர்களான நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜ் ஆகியோர் தங்களது வீட்டை ரூ.6.8 லட்சத்திற்கு லீசுக்கு விடுவதாகப் பேசியுள்ளனர்.
இதனை நம்பிய விவேக், கடந்த 30.12.2023 மற்றும் 01.02.2024 ஆகிய தேதிகளில் இரண்டு தவணைகளாக மொத்தம் ரூ.6.8 லட்சத்தை அவர்களிடம் வழங்கியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட நிர்மலா, வீட்டின் ஒரு சாவியையும் விவேக்கிடம் கொடுத்துள்ளார்.
ஒரு வாரத்தில் வீட்டை ஒப்படைப்பதாகக் கூறி ஏமாற்றம்!
வீட்டைச் சுத்தம் செய்து கொடுப்பதாகவும், ஒரு வாரம் கழித்து வந்து குடியேறிக் கொள்ளுமாறும் நிர்மலா தெரிவித்துள்ளார். இதனை நம்பி ஒரு வாரம் கழித்து விவேக் வீட்டிற்குச் சென்றபோது, அந்த வீட்டில் ஏற்கனவே வேறு நபர்களைக் குடியமர்த்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவேக், நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, தங்களிடம் அதிகப் பணம் கொடுத்ததால் வேறு நபர்களை வீட்டில் குடியமர்த்தியதாகவும், விவேக்கிடம் பெற்ற பணத்தை விரைவில் திருப்பித் தருவதாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ரூ.4 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு இழுத்தடிப்பு!
இதையடுத்து, 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை சிறிது சிறிதாக மொத்தம் ரூ.4 லட்சத்தை மட்டும் விவேக்கிடம் திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ.2.8 லட்சத்தைத் தொடர்ந்து திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சமீபத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாது எனக் கூறி விவேக்கை மிரட்டி அனுப்பியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெவள்ளூர் போலீசில் புகார் – பெண் கைது!
இதனால் பாதிக்கப்பட்ட விவேக், தன்னிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிர்மலா மற்றும் அவரது கணவர் விமல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரவள்ளூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நிர்மலா (45) என்பவரைப் பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு – கணவருக்குப் போலீசார் வலைவீச்சு!
கைது செய்யப்பட்ட நிர்மலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது கணவர் விமல்ராஜ் தலைமறைவாகியுள்ளதால், அவரைப் பிடிக்கப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்துள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
