Homeசெய்திகள்தமிழ்நாடுமுதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் வெளியிட்ட அமைச்சர் வன்னி அரசு மீது புகார்...

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் வெளியிட்ட அமைச்சர் வன்னி அரசு மீது புகார் – தேசிய புலிகள் ஆணையத்திடம் விசாரணை கோரிக்கை!

-

- Advertisement -

முதுமலை புலிகள் காப்பகத்தின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் குடும்பத்தினருடன் சென்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் அமைச்சர் வன்னி அரசு மீது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் அமைச்சர் சென்றதற்கு முறையான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் வெளியிட்டதாக சர்ச்சை

சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, கடந்த 10ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொக்காபுரம் வனப்பகுதிக்குள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது வனப்பகுதியில் நடமாடிய புலி மற்றும் யானையைப் பின்தொடர்ந்து சென்றதாகவும், வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்தபடி ரீல்ஸ் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காட்சிகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டதாகக் கூறப்படும் நிலையில், அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய புலிகள் ஆணையத்திடம் புகார்

அமைச்சரின் இந்தச் செயலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டதா, அங்கு நடந்து செல்ல வனத்துறை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக அனுமதி அளித்திருந்தார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ‘We The Leaders’ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி விக்ரம் என்பவர் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். வனப்பகுதிக்குள் அமைச்சர் சென்றதற்கான அனுமதி விவரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

சமூக வலைதளங்களில் எழும் கேள்விகள்

முதுமலை வனப்பகுதியைச் சுற்றி நீண்டகாலமாக வசிக்கும் உள்ளூர் மக்கள் வனப்பகுதிக்குள் நுழைந்தால் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்வதாகக் கூறப்படும் நிலையில், அமைச்சருக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்கான விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும், அமைச்சரின் பயணத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதன் விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தப் புகார் தொடர்பாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொள்கிறதா, வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறதா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

பாதுகாக்கபட்ட முதுமலை வனப்பகுதிக்குள் தடையை மீறி 5 கிலோ மீட்டர் டிரக்கிங் சென்ற அமைச்சர் வன்னியரசு!

MUST READ