விமானப் போக்குவரத்துத் துறையில் புதிய மைல்கல்லாக, சீனா உள்நாட்டிலேயே தயாரித்துள்ள மின்சாரப் பயணிகள் விமானமான CE-25A தனது முதல் விமானிகள் இயக்கும் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

சீனாவின் அரசு விமானத் தயாரிப்பு நிறுவனமான காமாக் (COMAC) உருவாக்கியுள்ள இந்த விமானம், கடந்த நவம்பர் 14ஆம் தேதி கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்ஜோ நகரில் சோதனை செய்யப்பட்டது.
இந்தச் சோதனைப் பறப்பின்போது விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் ஒரு விமானச் சோதனைப் பொறியாளர் பயணித்தனர். விமானம் திட்டமிட்டபடி இயங்கியதுடன், அதன் செயல்திறன் அளவீடுகளும் எதிர்பார்த்தபடி இருந்ததாக காமாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 பயணிகள் செல்லும் மின்சார விமானம்!
CE-25A விமானம் அதிகபட்சமாக 19 பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச புறப்பாட்டு எடை 10 டன்னாகும்.
இந்த விமானம் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. மேலும், 2,400 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறனும், ஒருமுறை மின்சாரத்தைப் பயன்படுத்தி 400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறனும் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள 10 மின்சார டக்டட் ஃபேன்கள் மூலம் உந்துவிசை கிடைக்கிறது. வழக்கமான விமான எரிபொருளுக்குப் பதிலாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் வகையில் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
சோதனைப் பறப்பில் புதிய சாதனை!
இந்த விமானம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியே ஆளில்லாமல் தானியங்கி முறையில் தனது முதல் சோதனைப் பறப்பை மேற்கொண்டது. அதன்பிறகு இதுவரை 19 ஆளில்லா சோதனைப் பறப்புகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
தற்போது விமானிகள் மற்றும் பொறியாளருடன் முதல் முறையாகப் பறந்து தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. இந்தச் சோதனையின்போது விமானம் சுமார் 16 நிமிடங்கள் 38 விநாடிகள் வானில் பறந்து, 60.4 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிகப் பயன்பாட்டுக்கு அனுமதி கிடைக்குமா?
இந்த மின்சார விமானத்தை காமாக் நிறுவனம், சீனாவின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான CATL மற்றும் ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, இந்த விமானத்திற்கான வகைச் சான்றிதழ் (Type Certificate) பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது. வணிக ரீதியாகப் பயணிகளை ஏற்றிச் செல்லத் தொடங்குவதற்கு முன்பு, தேவையான பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பச் சோதனைகளை நிறைவு செய்து அனுமதி பெற வேண்டும்.
குறுகிய தூர நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மின்சார விமானம், எதிர்காலத்தில் விமானப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
AI தொழில்நுட்பத்தால் வேலை இழப்பா? தொழிலாளர்களைப் பாதுகாக்க சீனா அறிவித்த 18 அம்சத் திட்டம்!
