குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள அம்பர்டி சபாரி பூங்காவில், சிங்கத்தை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்ற 3 ஒப்பந்த வனத்துறை ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
அம்பர்டி சபாரி பூங்காவில் சிங்கம் ஒன்றை மூன்று பேர் தனித்தனி மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து விரட்டிச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்தச் சம்பவம் தீபாவளி விடுமுறையின்போது நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சிங்கத்தை விரட்டிச் சென்றது ஏன்?
சபாரி பூங்காவில் சிங்கங்களுக்கு மாலை 5 மணியளவில் உணவு வழங்குவதற்காக, 100 மீட்டர் நீளம் மற்றும் 100 மீட்டர் அகலம் கொண்ட பாதுகாப்பு வேலியிடப்பட்ட பகுதியில் (கிரால்) அவற்றைக் கொண்டு செல்வது வழக்கம். அப்போது குறிப்பிட்ட சிங்கம் அந்தப் பகுதியிலிருந்து விலகிச் சென்றதால், அதை மீண்டும் அடைப்பிற்குள் வழிநடத்த ஊழியர்கள் முயன்றதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற பணிகளுக்கு வழக்கமாக ஜீப் போன்ற வாகனங்கள் பயன்படுத்தப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
3 பேரும் பணியில் இருந்து நீக்கம்
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று ஒப்பந்த ஊழியர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஜெய்பால் சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிங்கத்தைத் துன்புறுத்தும் நோக்கத்தில் ஊழியர்கள் செயல்படவில்லை என்று அம்பர்டி சபாரி பூங்காவின் பொறுப்பு உதவி வனப் பாதுகாவலர் மிதேஷ் வானியா விளக்கம் அளித்துள்ளார். பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்திருந்ததால், ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
