மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் அணை கட்டியே தீருவோம் எனக் கூறி வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் இதுவரை உரிய பதில் அளிக்காமல் அமைதி காத்து வருவது தமிழ்நாட்டிற்கு எதிரானது என்றும், மாநிலத்தின் உரிமையைப் பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருக்கார்த்திகை தீபத் திருவிழா, திருப்பரங்குன்றம் விவகாரம், மேகதாது அணை, நூலகப் புத்தகங்கள் கொள்முதல் தொடர்பான குற்றச்சாட்டுகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்
கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தபோதும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கக் கூடாது என்று தமிழிசை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் நிலை உருவாகும் எனக் காத்திருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாகவும் விமர்சித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் முதலமைச்சருக்கு கேள்வி
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் பார்வையாளராகக் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்ட தமிழிசை, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் குறித்து எந்தத் தெளிவான வழிமுறையும் தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார். டெல்லியில் பல்வேறு தலைவர்களைச் சந்தித்த பின்னரும் காவிரி விவகாரம் குறித்து பேசாதது தவறு என்றும் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறி வரும் நிலையில், தமிழக முதலமைச்சரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று கேள்வி எழுப்பினார். எல்லா விவகாரங்களிலும் அமைதியாக இருக்கலாம்; ஆனால் தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான இந்த விவகாரத்திலும் அமைதியாக இருக்கலாமா எனக் கேட்ட அவர், இது தமிழ்நாட்டிற்கு எதிரான அமைதி என்று விமர்சித்தார். 1991ஆம் ஆண்டு அணை கட்டுவது தொடர்பாக இரு மாநிலங்களின் அனுமதி தேவை என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாகவும், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம்
அமைச்சர் காந்திராஜ் காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுத்ததாகக் குறிப்பிட்ட தமிழிசை, பெண் அதிகாரிகளை இரவு நேரத்தில் சந்தித்து ரீல்ஸ் வெளியிடுவது, சிறுத்தை மற்றும் புலி போன்ற விலங்குகளுடன் ரீல்ஸ் எடுப்பது என அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார். அமைச்சர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது முதலமைச்சரின் பொறுப்பு என்றும், தீபாவளி பரிசு கொடுத்து பாராட்டுவதைவிட தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
நூலகப் புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டு
நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய தமிழிசை, இந்த விவகாரத்தில் கொள்கைத் தலைவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு ‘சாட் ஜிபிடி’ எனப் பதில் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக விமர்சித்தார். ‘அகல்விளக்கு’ என்ற பெயரில் பகல் கொள்ளை நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் மட்டுமின்றி, தற்போதைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.
கூட்டணி குறித்து பாஜக நிலைப்பாடு
முரசொலியில் பாஜக தொடர்பான செய்தி வெளியானதாலேயே கூட்டணி அமைந்துவிட்டதாகக் கூற முடியாது என்றும், கூட்டணி அமைப்பது அவ்வளவு எளிதானதல்ல என்றும் தமிழிசை தெரிவித்தார். தவெகவை விமர்சிப்பதைப் போலவே திமுகவையும் விமர்சிப்போம் என்றும், திமுக தங்களுக்கான எதிர்க்கட்சிதான் என்றும் கூறினார்.
திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளையும், தவெகவைச் சேர்ந்தவர்களின் ரீல்ஸ் செயல்பாடுகளையும் பாஜக எதிர்க்கும் என்றும், கட்சி நடுநிலையுடன் செயல்படும் என்றும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக ஆதரவு கேட்பது தொடர்பாக கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் தவறு நடந்தால் தட்டிக் கேட்போம்; நல்லது நடந்தால் பாராட்டுவோம் என்று குறிப்பிட்ட தமிழிசை, கடந்த கால ஆட்சியில் தவறு செய்த அமைச்சர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இவ்வாறு பல்வேறு அரசியல் மற்றும் மாநில உரிமை சார்ந்த விவகாரங்கள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.
