நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘AOT – ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய துல்கர் சல்மான், நமது வீட்டில் உள்ள பெண்களின் கனவுகளை நோக்கிப் பயணித்து அவர்கள் வெற்றி பெறும் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், தனது தந்தை மம்முட்டி நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படமும், தான் நடித்துள்ள படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பவன் சடிநேனி, நடிகர் துல்கர் சல்மான், நடிகை சாத்விகா வீரவல்லி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகர் சின்னி ஜெயந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வரும் 20-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
பெண்களின் வெற்றியைப் பேசும் கதை” – துல்கர் சல்மான்
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பாராட்டுகளை மறக்க முடியாது. அதற்கு எப்போதும் நன்றி.
இந்தப் படமும் அதுபோன்ற நல்ல அனுபவத்தை எனக்குக் கொடுத்துள்ளது. இது ஒரு தெலுங்குப் படமாகத் தோன்றாமல், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கான படமாக இருக்கும். அனைத்து மக்களிடமும் இந்தப் படம் சென்றடையும் என நம்புகிறேன்.
நமது வீட்டில் உள்ள பெண்களின் கனவுகளை நோக்கிப் பயணித்து அவர்கள் வெற்றி பெறும் கதையாக இந்தப் படம் அமைந்துள்ளது. நம்முடைய வீட்டில் உள்ள பெண்களுக்காக நாம் அனைவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். நடிகை சாத்விகா முதல் படத்திலேயே மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எனக்கு தம்பி போன்றவர். அவர் எப்படித் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். ஆனால், படத்திற்கான பாடல்கள் அனைத்தும் சரியான நேரத்தில் வந்துவிடும்.
எனது தந்தை நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படமும், நான் நடித்துள்ள திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருப்பது எங்கள் இருவருக்குமே மிகப்பெரிய மகிழ்ச்சி. ‘ஓம்’ படத்தின் பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் வீட்டில் அம்மா எனது படத்தையே பார்ப்பார்” என்று நகைச்சுவையாகக் கூறினார்.
மேலும், தன்னைப் பற்றி மற்றவர்கள் பாராட்டிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுகை வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
20 ஆண்டுகளாக இசைப் பயணம்” – ஜி.வி.பிரகாஷ்குமார்
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில், சில திரைப்படங்களின் கதையைக் கேட்டவுடனேயே அதில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும் என்றும், அந்த வகையில் ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படமும் தனக்கு அமைந்ததாகவும் தெரிவித்தார்.
“இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். துல்கர் சல்மான் எப்படித் திரைப்படங்களைத் தேர்வு செய்கிறார் என்று எனக்குத் தோன்றும். அவரிடமே இதுகுறித்து கேட்டிருக்கிறேன்.
தனக்குக் கிடைக்கும் கதைகளில் சிறந்த கதையைத் தேர்வு செய்வதாக அவர் கூறினார். இதற்கு முன்பு ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தில் பணியாற்றியுள்ளேன். அதேபோன்ற அனுபவம் இந்தப் படத்திலும் கிடைத்துள்ளது. இந்தப் படம் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும்.
இந்த ஆண்டு எனக்குப் பல வெற்றிப் படங்கள் கிடைத்துள்ளன. அந்த வரிசையில் இந்தப் படமும் வெற்றி பெறும் என நம்புகிறேன். வரும் டிசம்பர் மாதத்துடன் ‘வெயில்’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடையவுள்ளன. இதுவரை 125-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இப்போதும் முதல் படத்திற்கு இசையமைப்பது போன்ற உணர்வுடன்தான் பணியாற்றி வருகிறேன்.
முதல் படத்திற்கு இசையமைத்தபோது மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்ற பயம் இருந்தது. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. ‘வெயிலோடு விளையாடி’ பாடல் எனக்கு மிகவும் முக்கியமான பாடலாக அமைந்தது.
நான் பதற்றமாக இருந்தால் அமைதியாகிவிடுவேன். எப்போதும் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் பாடல்களைக் கேட்பேன். இசையமைப்பாளராக இல்லாமல் இருந்திருந்தால் கிரிக்கெட் வீரராகவோ அல்லது கணினிப் பொறியாளராகவோ ஆகியிருப்பேன்” என்று கூறினார்.
துல்கர் சல்மானுடன் நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க விருப்பம்” – சாத்விகா
நடிகை சாத்விகா வீரவல்லி பேசுகையில், “நானும் சென்னைப் பெண்ண்தான். ஆனால், வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் என்பதால் எனக்குத் தமிழ் அவ்வளவாக நன்றாகப் பேச வராது. சென்னைக்கு வரும்போதெல்லாம் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அது இப்போது நடந்துள்ளது.
துல்கர் சல்மானுடன் நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என மேடையிலேயே தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் கூறினார். மேலும், விண்வெளி தொடர்பான கதைக்களம் என்பதால் நிகழ்ச்சியில் விண்வெளி சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டன.
சில கேள்விகளுக்கு தவறாகப் பதிலளித்த சாத்விகா, துல்கர் சல்மானிடமும் கேள்வி கேட்க வேண்டும் என்று கூறினார். ஆனால், கேள்வியை முழுமையாகக் கேட்டு முடிப்பதற்குள் அதற்கான பதிலைத் துல்கர் சல்மான் அளித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
துல்கர் சல்மானைப் பாராட்டிய சின்னி ஜெயந்த்
நடிகர் சின்னி ஜெயந்த் பேசுகையில், இந்தப் படம் மிகவும் சிறப்பாக உருவாகியுள்ளதாகப் பாராட்டினார். தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த நடிகை சாத்விகா வீரவல்லி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சிறப்பாகப் பேசி நடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் படத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குப் போட்டுக் காட்ட வேண்டும் என்று நகைச்சுவையாகக் கூறினார். பல மொழிகளில் வெளியாகும் தனது திரைப்படங்களுக்கு அந்தந்த மொழிகளில் தானே குரல் கொடுக்கும் நடிகர் துல்கர் சல்மான் மட்டுமே எனப் பாராட்டினார்.
படத்தின் முன்னோட்டத்தை ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ள வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்ததாகவும், அதைப் பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் கூறினார். தொடர்ந்து துல்கர் சல்மானைப் பாராட்டி கவிதையும் வாசித்தார்.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதைப் போல, ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஓர் ஆண் இருப்பார் என்பதை இந்தப் படம் எடுத்துரைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
துல்கர் – மம்முட்டி இணைந்து நடிக்கும் படத்திற்கு தலைப்பு வைத்துவிட்டோம் – அல்லு அரவிந்த்
தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும், கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான அல்லு அரவிந்த் பேசுகையில், “நானும் சென்னைக்காரன்தான். இரண்டு படங்களைத் தயாரித்துவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இன்றுவரை திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
எனது வயதில் உள்ளவர்களை விட இளைஞர்கள்தான் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். அதனால் நானும் இளமையாக உணர்கிறேன். துல்கர் சல்மான் இயல்பாகவே சிறந்த நடிகர். இந்தப் படத்தில் கதாநாயகியும் சிறப்பாக நடித்துள்ளார். நமது வீட்டில் உள்ள பெண்கள் ஒரு துறையில் சாதிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போன்ற உணர்வை இந்தப் படம் கொடுக்கும்” என்றார்.
தொடர்ந்து துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார். அந்தப் படத்திற்கான தலைப்பைக்கூட ஏற்கெனவே வைத்துவிட்டதாகக் கூறி, ‘ஆகாயத்தில் ஒரு அதிசயம்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், சென்னைக்கு வரும்போதெல்லாம் முதலில் மெரினா கடற்கரைக்குச் சென்று நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
விண்வெளி பின்னணியில் குடும்ப உணர்வுகளையும் பெண்களின் கனவுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ திரைப்படம், வரும் 20-ஆம் தேதி பல மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முன்னோட்ட நிகழ்ச்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘கராத்தே பாபு’, ‘ஜீனி’…. படக்குழுவின் ரிலீஸ் பிளான் என்ன?
