மம்மூட்டியுடன் இணைந்து நடித்த தயாரா? என்ற கேள்விக்கு துல்கர் சல்மான் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனாகத் திரைத்துறையில் அறிமுகமாகி, இன்று தனது தனித்துவமான நடிப்பால் மலையாள சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். குறிப்பாக இவர், ‘சீதா ராமம்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் இந்திய அளவில் மிகப்பெரிய புகழையும் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பான்-இந்தியா திரைப்படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார் துல்கர்.
எப்போதும் ஒரே மாதிரியான கதைகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களையும் தனித்துவமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவது இவருடைய சிறப்பம்சமாகும். அந்த வகையில், துல்கர் சல்மான் தற்போது நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஏஓடி’ (AOT).
பவன் சதிநேனி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் புரொமோஷன் பணிகளும், இறுதிக்கட்ட வேலைகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துல்கர் சல்மானிடம் சுவாரசியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. “நீங்கள் இதுவரை உங்கள் அப்பாவுடன் (மம்மூட்டி) இணைந்து நடித்ததே இல்லை. உங்களையும் உங்கள் அப்பாவையும் வைத்து ஒரு படம் இயக்க நான் விரும்புகிறேன். இது குறித்த உங்கள் எண்ணம் என்ன?” என்று கேட்கப்பட்டது.
அதற்குத் துல்கர் சல்மான் மிகுந்த உற்சாகத்துடனும் நகைச்சுவையுடனும் பதிலளித்தார். “சார், நான் அவருடன் இணைந்து நடிக்க எப்போதுமே தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு முதலில் அவர்தான் ‘ஓகே’ சொல்ல வேண்டும். நீங்களே நேரில் வந்து அவரைச் சம்மதிக்க வைத்தால், நிச்சயமாக நானும் உங்களுடன் வருகிறேன்” என்று அவர் அளித்த பதில் அங்கிருந்தவர்களையும் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. தந்தையும் மகனும் ஒரே திரையில் தோன்றும் அந்தத் தருணத்திற்காகத் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த காம்போ இணைந்து புதிய படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
