அருண் விஜய் நடிக்கும் இருளன் பட போஸ்டர்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாகவும், வில்லனாகவும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்துத் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து வருபவர் நடிகர் அருண் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘ரெட்ட தல’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘இருளன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்தப் படத்தில் அருண் விஜயுடன் இணைந்து மிருணாளினி ரவி நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
நேதாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 19) நடிகர் அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘இருளன்’ திரைப்படத்தின் இரண்டு மிரட்டலான போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்களிலும் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் காட்சியளிக்கிறார்.
ஒரு போஸ்டரில் சாதாரணமான தோற்றத்தில் இருக்கும் அவர், மற்றொரு போஸ்டரில் நீண்ட தலைமுடியுடன் கூடிய ஆக்ரோஷமான சாமியார் போன்ற கெட்டப்பில் இருக்கிறார். இது படத்தின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்சியத்தையும் எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் அதிரடி குடும்ப எண்டர்டெயினராகத் தயாராகி வரும் இந்த படம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘தைத் திங்களில் வருகிறான்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், இப்படம் வரும் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அல்லது 2027 ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கிராமத்துக் கதைக்களங்களைக் கையாளும் இயக்குநர் முத்தையாவிற்கு, இந்த ‘இருளன்’ திரைப்படம் ஒரு மிகப்பெரிய கம்பேக் படமாக அமையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
