தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு, கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், கட்சியின் அமைப்பு ரீதியாகப் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

7,500 மண்டலத் தலைவர்கள் நியமிக்கத் திட்டம்
மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் முன்னெடுப்பில், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, தமிழகம் முழுவதும் கட்சியின் வாக்குச்சாவடி மற்றும் மண்டல அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுமார் 75,000 வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப, ஏறத்தாழ 7,500 மண்டலத் தலைவர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம்கள் முதற்கட்டமாகத் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவதன் மூலம் கட்சியின் தலைவர்களுக்கும் அடிமட்டத் தொண்டர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, அமைப்பை மேலும் ஒருங்கிணைக்க முடியும் எனக் கட்சி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
1967-க்கு முந்தைய வாக்கு வங்கியை மீட்க இலக்கு
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டுப் பெறுவதுடன், உள்ளாட்சி அமைப்புகளிலும் காங்கிரஸ் கட்சியினர் முக்கியப் பொறுப்புகளைப் பெறுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
1967-ஆம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்ததாகக் கூறப்படும் சுமார் 51 சதவீத வாக்கு வங்கியை மீண்டும் உருவாக்குவதே தங்களது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்றுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) நல்ல புரிதல் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்கள் பிரச்சனைகளில் களமிறங்க வேண்டிய அவசியம்
தமிழகத்தில் 78 மாவட்டக் கமிட்டிகள் மற்றும் 7,500 மண்டலத் தலைவர்கள் என அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்படும் மாற்றங்கள், உள்ளாட்சித் தேர்தலில் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதேவேளையில், புதிய நிர்வாகிகளை நியமிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், பொதுமக்களின் அன்றாடப் பிரச்சனைகளையும் காங்கிரஸ் தொண்டர்கள் கையில் எடுத்து நேரடியாகக் களத்தில் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்தி அரசியல் களத்தில் செயல்படுவதைப் போல, காங்கிரஸும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட மக்களின் பிரச்சனைகளில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
டெல்லி தலைமையின் அறிவிப்புகள் மற்றும் தேசியத் தலைவர்களின் பேச்சுகளை மட்டுமே சார்ந்திருக்காமல், மாநில அளவில் மக்களுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தி, தொடர்ச்சியான களப்பணிகளை முன்னெடுத்தால் மட்டுமே புதிய அமைப்பு மாற்றங்களின் நோக்கத்தை அடைய முடியும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தல்: பாஜக முன்னிலை; காங்கிரஸ் கட்சியில் தீவிர உட்கட்சித் சீராய்வு!
