தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்யும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று பிரதமர் முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியனிடம், தவெக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பதிலளிக்காமல் பிரதமர் மோடியைப் போல முதலமைச்சர் விஜய்யும் மௌனம் காப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “நாங்கள் தவெகவுடன் கூட்டணியிலும் இல்லை; அமைச்சரவையிலும் இல்லை. வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம். ஜனநாயகத்திற்காகவும், மக்கள் அளித்த ஆதரவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், மக்கள் அதிகாரத்தில் ஆளுநர் அமர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஆதரவைத் தொடர்ந்து வருகிறோம்.
ஆனால், ஆதரவு அளிக்கிறோம் என்பதற்காக அரசின் தவறான செயல்பாடுகளுக்கும் ஆதரவு அளிக்கிறோம் என்று பொருள் அல்ல. தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் தமிழக அரசால் பாதிக்கப்படும் போதெல்லாம் அறிக்கைகள் மூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் உடனடியாகக் கண்டித்து வருகிறோம்” என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்: கட்சி முடிவு செய்யும்!
தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த வீரபாண்டியன், “எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அது குறித்து கட்சி முடிவு செய்யும். நாங்கள் எடுக்கும் முடிவை முதலில் செய்தியாளர்களிடம்தான் தெரிவிப்போம்” என்று கூறினார்.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக முதல்வருக்கு கண்டனம்
தொடர்ந்து பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று பிரதமர் முன்னிலையிலேயே கர்நாடக முதல்வர் முன்மொழிந்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றார்.
இது இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீண்டகால நல்லுறவு மற்றும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு தொடர்பான பிரச்சினை என்றும், இதில் கர்நாடக முதல்வர் அவசரமாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தார்.
காவிரி டெல்டா பகுதியைச் சென்றடையாமல் அந்த நதிக்கு முழுமையான பொருள் இல்லை என்றும், எத்தகைய அணையைக் கட்ட முயன்றாலும் காவிரி வந்து சேரும் இடம் டெல்டாதான் என்றும் அவர் குறிப்பிட்டார். காவிரி நீரைத் தடுப்பதற்காக அணை கட்டுவது இயற்கைக்கு முரணானது என்றும் கூறினார்.
தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க கோரிக்கை
தமிழக முதலமைச்சர் மற்றும் அரசியல் கட்சிகளின் நீண்டகால கோரிக்கையான உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை மு.வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
மேலும், தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டு மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியைக் கோரியுள்ள நிலையில், அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகளைக் காரணம் காட்டி மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தடைகளை ஏற்படுத்தக் கூடாது என்றார்.
தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மாநில அரசு முன்வைத்துள்ள நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்
பண்டிகைக் காலம் என்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் வலியுறுத்தினார்.
ஏழை, எளிய மக்களால் அத்தியாவசியப் பொருட்களைக்கூட வாங்க முடியாத நிலை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சினை குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நல்லிணக்கம் தொடர வேண்டும்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்துப் பேசிய அவர், முன்பு இருந்த நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
“கடவுள் வேறுபடலாம்; மதங்கள் வேறுபடலாம்; வழிபாட்டு முறைகள் வேறுபடலாம். ஆனால், ஒருவர் மற்றவரை மதிக்கின்ற நல்லிணக்க பூமியாகத் தமிழ்நாடு விளங்குகிறது. எந்தச் சூழலிலும் கடவுள், மதம், வழிபாடு ஆகியவற்றின் பெயரால் மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் பதற்றம் உருவாகிவிடக் கூடாது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முன்பு இருந்த அதே நிலை தொடர வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தினார்.
UPI கட்டண முறையை ரத்து செய்க! மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
