நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, உதகை அருகே உள்ள கொதுமுடி கிராமத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவின் தொடக்கமாக, கொதுமுடி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் படுகர் இன மக்கள் திரளாகப் பங்கேற்று ஹெத்தையம்மனை வழிபட்டனர்.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) கடுமையான விரதம் மேற்கொள்ளும் ‘ஹெத்தைக்காரர்கள்’ பங்கேற்கின்றனர்.
இவர்கள் பாரம்பரிய வெள்ளை உடை அணிந்து, புனிதச் செங்கோலுடன் ஹெத்தையம்மனின் தாய்வீடாகக் கருதப்படும் கொதுமுடி கிராமக் கோயிலுக்குப் பாதயாத்திரையாகச் சென்று அம்மனை வழிபடுவது வழக்கம்.
திருவிழா தொடங்கியதையொட்டி, படுகர் இன மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, பாரம்பரிய நடனமாடி உற்சாகத்துடன் ஹெத்தையம்மனை வழிபட்டனர். இதனால் கொதுமுடி கிராமம் விழாக்கோலம் பூண்டது.
கோயிலில் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள், தங்களது வேண்டுதல்கள் நிறைவேறக் காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.
ஹெத்தைக்காரர்கள் அருள்வாக்கு கூறுவது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளும் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
நடப்பு ஆண்டில் கொதுமுடி கிராமத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு படுகர் கிராமங்களிலும் நடைபெற உள்ளது.
அந்தந்த கிராமங்களில் பாரம்பரிய வழிபாடுகள், பூக்குண்டம் இறங்கும் நிகழ்வுகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெறவுள்ளன.
படுகர் இன மக்களின் பண்பாடு, பாரம்பரியம், வழிபாட்டு நம்பிக்கை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் இந்த ஹெத்தையம்மன் திருவிழா, நீலகிரி மாவட்டத்தின் முக்கியமான பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
