ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு இறைவன், சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் இந்தாண்டு அடுத்தடுத்து திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தினை இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘அடங்கமறு’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் ராஷி கன்னா, சம்பத்ராஜ், பூர்ணா, பொன்வண்ணன், முனீஸ் காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அதிகார மிரட்டலுக்கு அடிபணியாமல் தன் கடமைகளை நேர்மையாக செய்து வரும் காவல் அதிகாரிகளுக்கு சமர்ப்பணமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பைத் தொடர்ந்து கார்த்திக் தங்கவேல் தனது அடுத்த படத்தை மீண்டும் ஜெயம் ரவியின் நடிப்பில் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


