Homeசெய்திகள்சென்னைசென்னை அருகே அமெரிக்க கடற்படைக் கப்பல்!

சென்னை அருகே அமெரிக்க கடற்படைக் கப்பல்!

-

- Advertisement -

இந்தியா – அமெரிக்கா இடையிலான கடல்சார் ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் நிலையில், அமெரிக்கக் கடற்படையின் விநியோகக் கப்பலான USNS Wally Schirra, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக காட்டுப்பள்ளி எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு வந்துள்ளது.

சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான USNS Wally Schirra கப்பல் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வந்தடைந்தது.

இந்தியா – அமெரிக்கா இடையிலான முதன்மைக் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தின் கீழ், இந்தக் கப்பலில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

எல் அண்ட் டி நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் பழுதுபார்ப்புக்காக வருவது இது ஐந்தாவது முறையாகும்.

இதன் மூலம் இந்தியாவின் கப்பல் பழுதுபார்ப்புத் தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பு மீதான அமெரிக்காவின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

USNS Wally Schirra கப்பல், அமெரிக்கக் கடற்படையின் ராணுவக் கடல்வழிப் போக்குவரத்துக் கட்டளையின் (Military Sealift Command) கீழ் செயல்படுகிறது.

அமெரிக்க ராணுவம் மற்றும் அரசுத் துறைகளுக்குத் தேவையான கடல்வழிப் போக்குவரத்து, தளவாட உதவிகள் மற்றும் சிறப்புக் கடல்சார் சேவைகளை இந்த அமைப்பு வழங்குகிறது.

ஐந்தாவது முறையாக பழுதுபார்ப்பு!:

இந்தியா – அமெரிக்கா இடையிலான கப்பல் பழுதுபார்ப்பு ஒத்துழைப்பு 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அப்போது USNS Charles Drew என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இந்தியக் கப்பல் கட்டும் தளத்தில் முதன்முறையாகப் பழுதுபார்க்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் USNS Matthew Perry கப்பலும், அதே ஆண்டு ஜூலை மாதம் USNS Salvor கப்பலும் காட்டுப்பள்ளியில் பழுதுபார்க்கப்பட்டன.

இந்த ஒத்துழைப்பை முறைப்படுத்தும் வகையில், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எல் அண்ட் டி நிறுவனத்தின் காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், அமெரிக்கக் கடற்படையுடன் முதன்மைக் கப்பல் பழுதுபார்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் மூலம் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களுக்கு இந்தியாவில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வழிவகை ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2024-ம் ஆண்டு டிசம்பரில் USNS Charles Drew கப்பல் மீண்டும் காட்டுப்பள்ளிக்கு வந்து பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொண்டது. தற்போது USNS Wally Schirra வருகை தந்துள்ளதால், இந்தியா – அமெரிக்கா இடையிலான கடல்சார் தொழில்துறை ஒத்துழைப்பில் மற்றொரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டுக் கப்பல்களின் பணியாளர்கள் இந்தியாவுக்கு வருவதற்கும், இங்கிருந்து வெளியேறுவதற்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் திருத்தப்பட்ட புதிய வழிகாட்டு நடைமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, பழுதுபார்ப்புக்காக இந்தியா வந்துள்ள முதல் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் இதுவாகும்.

இந்த நடைமுறைகளை உருவாக்குவதில் இந்திய வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், குடியேற்றப் பணியகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறை ஆகியவை இணைந்து செயல்பட்டுள்ளன.

சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம், விரிவான கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறமையான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

இதன் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேசக் கப்பல் பழுதுபார்ப்பு மையமாக இந்தியா உருவெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சென்னையில் ரூ.700 கோடி மதிப்புள்ள 70 கிலோ ஹெராயின் பறிமுதல் – மொபைல் ஐஸ்கிரீம் வாகனத்தில் கடத்தல்; இருவர் கைது!

MUST READ