பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் ஃபைபர் படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

படகுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள மீனவர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
6 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை:
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் சிறைப்பிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்க வேண்டும் என்று கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
அரசுக்கும், முதலமைச்சருக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் எனப் பல்வேறு வழிகளில் எங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
படகுகள் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அவை சேதமடைந்து, மூழ்கும் நிலையில் உள்ளன. இதனால் படகு உரிமையாளர்கள் மட்டுமின்றி, அவற்றை நம்பி வாழும் மீனவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன.
ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கடிதத்தின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? படகுகள் ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை? என்பது குறித்து எங்களுக்கு எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அருகில் உள்ள அண்டை மாநிலமான ஆந்திராவில் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளையே மீட்க முடியாத நிலையில், மீன்வளத்துறை எதற்காகச் செயல்படுகிறது என்ற கேள்வி எழுகிறது என்றனர்.
கடந்த ஆட்சியில் உடனடி பேச்சுவார்த்தை:
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து சுவரொட்டி ஒட்டினாலே, உடனடியாக அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். எங்களைப் போராட்டத்துக்குச் செல்லவிடாமல் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால், தற்போது மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை. நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியும், கோரிக்கைகளை முன்வைத்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. கேள்வி கேட்டால் பதிலளிக்கக்கூட யாரும் முன்வருவதில்லை என வேதனை தெரிவித்தனர்.
மீன்வளத்துறை அமைச்சர் சந்திக்க மறுப்பு:
மீனவர்களின் பிரச்சினைகளை நேரில் எடுத்துக் கூறுவதற்காக மீன்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க அனுமதி கேட்டும், அவரைச் சந்திக்க முடியவில்லை என்று சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், படகுகள் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம், புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதற்காக அமைச்சரைச் சந்திக்க முயன்றோம். ஆனால், எங்களைச் சந்திக்க அவர் தயாராக இல்லை.
மீனவ சமுதாயத்தின் குறைகளைக் கேட்கவும், அவர்களின் வலியைப் புரிந்துகொள்ளவும் வேண்டிய மீன்வளத்துறை அமைச்சர் எங்களையே சந்திக்க மறுத்தால், எங்களது பிரச்சினைகளை யாரிடம் எடுத்துச் செல்வது?
அமைச்சர் ஆனந்த், மரிய வில்சன், ஸ்ரீநாத் உள்ளிட்ட அமைச்சர்களைச் சந்தித்தும் இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. எனவே, இனி முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு எங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றனர்.
8 படகுகளுக்கு ஏன் தாமதம்?:
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு படகு காசிமேட்டில் சிறைப்பிடிக்கப்பட்டபோது, அந்தப் படகை விடுவிப்பது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உடனடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஒரு படகு சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு மணி நேரத்துக்குள் பலமுறை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அமைச்சர், ஆந்திர மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளை மீட்க ஏன் அதே வேகத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த விவகாரத்தில் முதலமைச்சரிடம் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? காசிமேடு மீனவர்கள் மீது தமிழக அரசு காட்டும் அக்கறை இதுதானா? என்று சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஆந்திர நீதிமன்றத்திலிருந்தும் படகுகளை விடுவிப்பது தொடர்பாக உத்தரவு அல்லது பரிந்துரை வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவற்றை மீட்பதில் தமிழக அரசு ஏன் தொடர்ந்து தாமதம் செய்கிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
புயலில் உயிரிழந்த 9 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்:
இதற்கிடையே, முரசு புயலின்போது உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கெனவே 9 மீனவர்களை இழந்து அவர்களது குடும்பங்கள் தவித்து வருகின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவியும், எதிர்கால வாழ்வாதாரத்துக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
முதல்வர் தலையிட வேண்டும் – போராட்டம் தொடரும்:
தவெக அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மீனவ மக்கள் பெருமளவில் ஆதரவளித்ததாகக் கூறிய சங்க நிர்வாகிகள், ஆட்சி அமைந்த பிறகு மீனவர்களின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினர்.
முதலமைச்சர் ஏற்கெனவே இரண்டு முறை ஆந்திர மாநிலத்துக்குச் சென்றுள்ள நிலையில், அங்கு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 8 விசைப்படகுகளை மீட்பது குறித்து ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
எங்களது வாழ்வாதாரமும் வருமானமும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகின்றன. 6 மாதங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் வேறு வழியின்றி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியுள்ளோம்.
எனவே, முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு ஆந்திராவில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 8 விசைப்படகுகளையும் மீட்டுத் தர வேண்டும். முரசு புயலில் உயிரிழந்த 9 மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த இரு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று மீனவர் சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
இதனால் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை அரசின் கவனத்தைப் பெற்றுள்ளது.
