சென்னை பெருநகரப் பகுதியை விரிவுபடுத்தி, அப்பகுதிக்கான ஒருங்கிணைந்த பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக ரூ.45.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (CMDA) நிர்வாக வரம்பு தற்போது 1,189 சதுர கிலோமீட்டராக உள்ளது. இந்நிலையில், சென்னை பெருநகரப் பகுதியின் நிர்வாக வரம்பு 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கான நீண்டகால வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிப்பதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெருநகரத் திட்டமிடல் ஆலோசகரை நியமிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்துக் கட்டமைப்பு, வீட்டு வசதி, பொருளாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. குறிப்பாக, நீர்நிலைகள் மற்றும் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கும் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
மேலும், சென்னை பெருநகரப் பகுதி முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை ஏற்படுத்துதல், போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துதல், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்தல் ஆகியவற்றையும் இலக்காகக் கொண்டு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதிகளில் எதிர்கால மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் நகர்ப்புறத் தேவைகளைக் கருத்தில் கொண்டு நீண்டகால அடிப்படையில் திட்டமிட்ட வளர்ச்சியை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
