திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில், வங்கக்கடலில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் ‘அக்வான்’ புயல் காரணமாகக் கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று (நவம்பர் 17) தொடர்ந்து 5-வது நாளாகக் கடலுக்குச் செல்லவில்லை.
கரையோரத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட படகுகள்
புயல் சின்னம் தீவிரமடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 1,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் பைபர் படகுகளைக் கடலுக்குள் இறக்காமல் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாலும், பலத்த காற்று வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் தங்களது வலைகள் மற்றும் படகுகளின் இயந்திரங்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஐந்து நாட்களாக மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளதால், பழவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தகட்ட அறிவிப்பு மற்றும் மீன்வளத்துறையின் அனுமதி கிடைத்த பிறகே மீண்டும் கடலுக்குச் செல்ல முடியும் என்பதால், மீனவர்கள் கடற்கரைப் பகுதிகளில் காத்திருக்கின்றனர்.
