சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் செயல்பட்டு வந்த மசாஜ் நிலையத்தில் விபசாரம் நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.![]()
இதுதொடர்பாக மசாஜ் நிலைய மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள மசாஜ் நிலையத்தில் விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த நிலையத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த போலீசார், நேற்று மாலை அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடைபெற்று வந்தது உறுதியானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 இளம்பெண்களை போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், மசாஜ் நிலைய மேலாளரான மணிப்பூரைச் சேர்ந்த ஹேனா என்பவரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் நிலைய உரிமையாளரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மசாஜ் என்ற பெயரில் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு, ஆசை வார்த்தைகள் கூறி நூதன முறையில் விபசாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மசாஜ் நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்து வந்து, தன்னைப் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி தொல்லை கொடுப்பதாக மீட்கப்பட்ட இளம்பெண் ஒருவர் போலீஸ் உயர் அதிகாரி ஒருவருக்குத் தகவல் அளித்துள்ளார். அந்தத் தகவலின் அடிப்படையிலேயே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
