சண்டியர்’ படத்தின் தலைப்பை மாற்றக் கோரி டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் போராட்டம் – புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட சமூக அமைப்புகள் பங்கேற்பு; கிருஷ்ணசாமி அறிவிப்பு!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘சண்டியர்’ திரைப்படத்தின் தலைப்பை மாற்றக் கோரி, வரும் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் ஊர்வலமாகச் சென்று சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழு உறுப்பினர்களிடம் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி மனு அளிக்க உள்ளதாகவும், ‘திரை உலகமே திரும்பிப் பார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயர் வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என ஏற்கெனவே அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்துள்ளோம். இதேபோல், தயாரிப்பாளர் சங்கத்திடமும் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி மனு அளித்திருந்தோம்.
இதற்குப் பிறகு படக்குழுவினருக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வழங்கினோம். கடந்த 2004ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட தலைப்பை மீண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இது தனிப்பட்ட முறையில் கிருஷ்ணசாமிக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல. தென்மாவட்டங்களில் நிலவும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டே இந்த விவகாரத்தில் பேசுகிறோம்.
ஏற்கெனவே ‘சண்டியர்’ படத்தின் பெயரை மாற்றிவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என பத்து நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தோம். ஆனால், படத்தின் தலைப்பை மாற்றப் போவதில்லை என்பதுபோல் படக்குழுவினர் மீண்டும் ‘சண்டியர்’ என்ற பெயரில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.
கமல்ஹாசன் படங்களில் இடம்பெறும் சாதி தொடர்பான காட்சிகளால் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவேதான், இந்தப் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதனை வலியுறுத்தி வரும் டிசம்பர் 7ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அன்றைய தினம் சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவிடம் படத்தின் தலைப்பை மாற்றக் கோரி மனு அளிக்க உள்ளோம். மேலும், ‘திரை உலகமே திரும்பிப் பார்’ என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட உள்ளது.
டிசம்பர் 7ஆம் தேதி காலை 11 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சாஸ்திரி பவனைச் சென்றடைந்து, அங்குள்ள தணிக்கை குழு உறுப்பினர்களிடம் மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காகக் காவல்துறையிடம் அனுமதி கோரியுள்ளோம்.
காவல்துறை அனுமதி வழங்கிய பிறகே போராட்டம் நடைபெறும் இடம் இறுதி செய்யப்படும் என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
