உக்ரைன் இடையிலான போர் ஐரோப்பிய எல்லைகளைத் தாண்டி விரிவடைந்து வரும் நிலையில், லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கடற்படைக்குச் சொந்தமான ‘மெர்குரி’ போர்க்கப்பலை உக்ரைன் கடற்படை ட்ரோன்கள் மூலம் தாக்கி மூழ்கடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 22-ம் தேதி லிபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி கடற்படைத் தளத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நவம்பர் 23-ம் தேதி வெளியிட்ட தகவலில், உக்ரைன் தயாரிப்பிலான ஏழு கடற்படை ட்ரோன்கள் இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ரஷ்ய கடற்படையில் இணைக்கப்பட்ட புதிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘மெர்குரி’ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும், அந்தக் கப்பலில் இருந்த கே-27 ராணுவ ஹெலிகாப்டரும் அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டது:
இந்த நடவடிக்கையில் ரஷ்யாவுக்குச் சொந்தமான ‘எம்.வி. அங்காரா’ என்ற சரக்குக் கப்பலும் குறிவைக்கப்பட்டதாக ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
இந்தக் கப்பல் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. அந்தக் கப்பல் மீதான தாக்குதலில் இலக்கு தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பான எஸ்.பி.யு. இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியாவில் விசாரணை:
பெங்காசி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய போர்க்கப்பல் மீது ஆளில்லா கடல்சார் வாகனங்கள் தாக்குதல் நடத்தியதாக லிபியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் அது கடலில் கவிழ்ந்த நிலையில் செயற்கைக்கோள் படங்களில் காணப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் ரஷ்யா மற்றும் லிபியாவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலின் பின்னணி, ட்ரோன்கள் வந்த வழி உள்ளிட்ட விவரங்களைக் கண்டறிய ரஷ்யாவுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என்று லிபியாவின் கிழக்குப் பகுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.
லிபியாவின் இறையாண்மை குறித்த கவலை:
லிபியாவின் மேற்குப் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட அரசு, வெளிநாடுகளுக்கு இடையிலான போரைத் தீர்ப்பதற்காக லிபியாவின் துறைமுகங்கள் மற்றும் கடல் எல்லைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளது.
லிபியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனித்தனி நிர்வாகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், இந்தத் தாக்குதல் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது.
ரஷ்யாவின் தரப்பில் தாக்குதல் தொடர்பான முழுமையான விளக்கம் உடனடியாக வெளியாகவில்லை. இந்தச் சம்பவம், ரஷ்யா – உக்ரைன் மோதல் கருங்கடல் பகுதியைத் தாண்டி மத்தியதரைக் கடல் பிராந்தியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதைக் காட்டுகிறது.
அமெரிக்க போர் விமானம், தளங்கள் மீது ஈரான் தாக்குதல்? மத்திய கிழக்கில் வெடிக்கும் போர்ப் பதற்றம்!
