Homeசெய்திகள்தமிழ்நாடு“எல் நினோவால் உணவு உற்பத்தி பாதிக்கும் அபாயம்; டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்”...

“எல் நினோவால் உணவு உற்பத்தி பாதிக்கும் அபாயம்; டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்” – பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்!

-

- Advertisement -

எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவிரி டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்து வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சரிடம் மனு

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் நீர்வளத்துறைச் செயலாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்னர், பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

குறுவை சாகுபடி இழப்பு; சம்பா பயிர்களும் பாதிப்பு

தமிழ்நாட்டில் எல் நினோ தாக்கத்தால் உணவு உற்பத்தி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடியை முழுமையாக இழந்துள்ளோம். தற்போது சம்பா பயிர்களும் தண்ணீரின்றிக் கருகி வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த நெல் உற்பத்தியும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து மனு அளித்துள்ளோம்.

விரைவில் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்யக் குழு அமைத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையம் மீது குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாகப் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது என்றும், இதற்கான நடவடிக்கைகளை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டார் என்றும் குறிப்பிட்டார்.

காவிரியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதைத் தீர்மானிப்பதற்காகவே ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டதாகவும், இதற்கான அம்சங்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

கர்நாடக அரசு உரிய தண்ணீரைத் திறந்துவிடாதபோது, மத்திய அரசை அணுகி தமிழகத்துக்கான நீரைப் பெற்றுத்தர காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், ஆணையத்தின் தலைவர் இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை எனக் குற்றம்சாட்டிய பி.ஆர். பாண்டியன், இதுதொடர்பாகத் தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கர்நாடக முதலமைச்சர் பேச்சுக்குக் கண்டனம்; ராசிமணல் அணை கோரிக்கை

கர்நாடக முதலமைச்சர் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் குற்றம்சாட்டிய பி.ஆர். பாண்டியன், பிரதமர் முன்னிலையில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் பேசுவது கண்டனத்திற்குரியது என்றார்.

மேலும், காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் ராசிமணலில் அணை கட்டுவதற்கான பணிகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆறுகளில் தேங்கிக் கிடக்கும் நீரை டீசல் மோட்டார்கள் மூலம் இறைத்து கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்றப் போராடும் தஞ்சை விவசாயிகள்!

MUST READ