திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது. மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோட்டை தெரு பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களைத் தவிர மற்றவர்களுக்கு அந்தப் பகுதியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று ஒருநாள் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மலைக்குச் செல்லும் பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலைக்குச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்ட இந்தத் தடை, நேற்றும் தொடர்ந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பக்தர்கள் மலை மீது செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
கோட்டை தெரு பகுதியில் வசிக்கும் மக்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே நுழைய முடியாத வகையில் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று மாலை 6 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் பழனி ஆண்டவர் கோவில் நுழைவாயில் பகுதியில் போலீசார் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
