2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 26/11 பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ஹுசைன் ராணா, தனது புதிதாகப் பிறந்த பேத்தியைப் பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச சிறப்பு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் முக்கிய சதிகாரராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராணா, அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு, 2025-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி முதல் டெல்லி திஹார் சிறையின் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க முடியாத நிலையில், புதிதாகப் பிறந்த பேத்தியையும் குடும்பத்தினரையும் வீடியோ காலில் பார்க்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு என்ஐஏ நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் சர்மா, டிசம்பர் 14, 2026 மற்றும் ஜனவரி 4, 2027 ஆகிய தேதிகளில் தலா 10 நிமிடங்கள் வீடியோ காலில் பேச அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வீடியோ அழைப்புகள் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மட்டுமே பேச வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், முழு உரையாடலும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலில் சிறை கண்காணிப்பாளர் எதிர்முனையில் இருப்பவர்களிடம் தொடர்பை உறுதிப்படுத்திய பிறகே ராணாவிடம் அழைப்பு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதே காரணத்தைக் கூறி எதிர்காலத்தில் மீண்டும் இத்தகைய அனுமதியைக் கோரக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ராணாவின் கோரிக்கைக்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) எதிர்ப்பு தெரிவித்தது. சிறைக் காவலில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு வீடியோ கால் வசதியைப் பெறுவதற்கான சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் என்ஐஏ தரப்பில் வாதிடப்பட்டது.
இருப்பினும், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், குறிப்பிட்ட தேதிகளில் கடுமையான கண்காணிப்பு நிபந்தனைகளுடன் வீடியோ கால் பேச அனுமதி வழங்கியுள்ளது.
2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கில் ராணா தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
இந்த வழக்கில் என்ஐஏ இரண்டாவது கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது. அடுத்த மாதம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது தொடர்பான வாதங்கள் நடைபெற உள்ளன.
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி! நாளை லக்னோவில் கார்கே பங்கேற்பு
