Homeசெய்திகள்இந்தியா455 கேக், குக்கீஸ்களில் இந்தியப் பண்பாட்டு பெருமை!

455 கேக், குக்கீஸ்களில் இந்தியப் பண்பாட்டு பெருமை!

-

- Advertisement -

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபுகளை கேக் மற்றும் குக்கீஸ்களில் வடிவமைத்து புனே கலைஞர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ராயல் ஐசிங் மற்றும் பாரம்பரியக் கலைஞர் பிராச்சி தபால் டெப் தலைமையில், நாடு முழுவதிலுமிருந்து வந்த 36 கலைஞர்கள் இணைந்து மொத்தம் 455 கேக் மற்றும் குக்கீஸ்களை உருவாக்கியுள்ளனர்.

இந்தக் கண்காட்சி நவம்பர் 16-ம் தேதி புனேவில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் கலாசாரச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலைப்படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

மொத்தம் 455 படைப்புகளில் 75 கேக்குகள் இடம்பெற்றிருந்தன. இவை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் திருவிழாக்கள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், கட்டடக்கலை, புராணங்கள், ஆடைகள் மற்றும் கலை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன.

மேலும், 380 கையால் வடிவமைக்கப்பட்ட ராயல் ஐசிங் குக்கீஸ்களை பிராச்சி தபால் டெப் உருவாக்கியிருந்தார். இவற்றில் இந்தியாவின் பாரம்பரிய நெசவுத் தொழில், கைத்தறி ஆடைகள், நகை வடிவமைப்புகள் உள்ளிட்ட பண்பாட்டுக் கூறுகள் இடம்பெற்றிருந்தன.

கேரளாவின் ஓணம் பண்டிகை, உத்தரப் பிரதேசத்தின் லத்மார் ஹோலி, மேகாலயாவின் உயிருள்ள வேர்ப்பாலங்கள், மகாராஷ்டிராவின் பாரம்பரிய பேஷ்வாய் திருமணங்கள், குடி பட்வா பண்டிகை உள்ளிட்ட பல்வேறு கலாச்சார அடையாளங்கள் கேக்குகளில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, பாற்கடலைக் கடையும் புராண நிகழ்வான ‘சமுத்திர மந்தன்’ காட்சி 9 அடி உயர கேக் வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. கேரளாவின் கதகளி கலை வடிவமும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் இடம்பெற்றிருந்தது.

இந்த முயற்சி குறித்து பிராச்சி தபால் டெப் கூறுகையில், இந்தியாவின் கலாசாரப் பன்முகத்தன்மையைப் படைப்பாற்றல் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், நாடு முழுவதும் உள்ள கலைஞர்களை ஒரே தளத்தில் இணைப்பதுமே தனது நோக்கம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புனே மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் பவ்னீத் கவுர், பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், நவீனக் கலை வடிவங்கள் மூலம் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதிலும் இதுபோன்ற முயற்சிகள் முக்கியப் பங்காற்றும் என்று பாராட்டினார்.

இந்தக் கண்காட்சி லண்டனைச் சேர்ந்த ‘வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கேக் மற்றும் குக்கீஸ்களின் மிகப்பெரிய கண்காட்சி என்ற உலக சாதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்களையே கலைப் படைப்புகளாக மாற்றி, இந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களை உலக அரங்கில் எடுத்துச் சென்றுள்ள புனே கலைஞர்களின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு திட்டமிட்டு வாபஸ் பெறப்பட்டது; அவர் கொல்லப்பட வேண்டும் என்பதே நோக்கம்! – ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

 

 

MUST READ