Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய் உடனடியாகச் சுயபரிசோதனை செய்ய வேண்டும் – எஸ்.பி. லட்சுமணன் கடும் விமர்சனம்!

விஜய் உடனடியாகச் சுயபரிசோதனை செய்ய வேண்டும் – எஸ்.பி. லட்சுமணன் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள நிர்வாக ரீதியான சர்ச்சைகள் குறித்து, மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.விஜய் உடனடியாகச் சுயபரிசோதனை செய்ய வேண்டும் – எஸ்.பி. லட்சுமணன் கடும் விமர்சனம்!

‘தி டிபேட்’ ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், இந்த விவகாரத்தில் ஆளும் தரப்பினரின் செயல்பாடுகள், அதிகாரிகளின் அணுகுமுறை மற்றும் முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்து அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா?

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அளித்த புகார் விவகாரத்தில், ஒட்டுமொத்த நிர்வாகமும் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி. லட்சுமணன் விமர்சித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஆட்சியரை மாவட்ட அளவிலான அதிகாரி ஒருவர் தொடர்புகொண்டு, புகாரில் இடம்பெற்றுள்ள சில தேதிகளையும், “தலைமைச் செயலாளரிடம் சொன்னேன்” என்ற குறிப்பையும் நீக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நேர்மையான அதிகாரி எனக் கருதப்படும் தலைமைச் செயலாளர் சாய்குமாரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிர்வாகம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் மௌனம் காப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூகக் கேடுகளைச் சாதாரணமாகக் கடந்து செல்லும் போக்கு

அரசியல் களத்தில் நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராகப் பதிவிடப்படும் தகாத கருத்துகள் உள்ளிட்டவற்றைத் தட்டிக்கேட்காமல், அவற்றைச் சாதாரணமான ஒன்றாக மாற்றும் போக்கு நிலவுவதாக எஸ்.பி. லட்சுமணன் கவலை தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சிக் காலங்களில் தவறுகள் நடைபெற்றபோது, அரசியல் தலைவர்கள் உடனடியாகக் கட்சி ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய சூழலில் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆபத்தானது என எச்சரித்துள்ளார்.

மௌனம் புத்திசாலித்தனமான வியூகம் அல்ல!

ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த நான்கரை ஆண்டுகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். “நாம் மௌனமாக இருப்பதே சிறந்த வியூகம் எனச் சிலர் தவறாக வழிநடத்துகிறார்கள்.

அதனை நம்பி நீங்கள்தான் புத்திசாலி என நினைத்தால், அதைவிடப் பெரிய தவறு வேறொன்றும் இல்லை” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மக்கள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்றும், அவர்கள் கொதித்தெழுந்தால் அதனை யாராலும் தாங்க முடியாது என்றும் எஸ்.பி. லட்சுமணன் எச்சரித்துள்ளார்.

ஆட்சிக்குத் தலைமை வகிக்கும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து மௌனம் காப்பது அவருக்கும், அவரது கட்சிக்கும், மாநிலத்திற்கும் நல்லதல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எனவே, முதலமைச்சர் விஜய் உடனடியாகச் சுயபரிசோதனை செய்து கொண்டு, நிர்வாகத்தில் நடைபெறும் தவறுகளைச் சரிசெய்து, நல்ல பாதையில் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும் என்றும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் அறிவுறுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜய் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் வலியுறுத்தல்!

MUST READ