தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 26) ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரிடம் புகார் மனு அளித்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், என்.ஆர். இளங்கோ மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோரும் உடனிருந்தனர்.

ஆளுநரைச் சந்தித்து மனு அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மாநில அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இந்த ஆட்சி மீது தங்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தச் சம்பவத்தில் முதலமைச்சரும் உடந்தையாக இருப்பதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். எனவே, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவமே நடக்கவில்லை என்று பொய் சொன்ன மூன்று அமைச்சர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின், “நேற்று நான் அளித்த பேட்டியை நீக்கச் சொல்லி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள். தூங்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘டம்மி’ முதலமைச்சர் இன்னும் எந்திரிக்கவே இல்லை; அவர் திருந்தவும் இல்லை” என ஆவேசமாக விமர்சித்தார்.
தொடர்ந்து மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுள்ள 80 சதவீதக் குற்றச் சம்பவங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்றும், அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளிலும் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு உள்ளது என்றும் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் மட்டும் இந்த ஆட்சியில் 10 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என்றும், அவர்களைக் கண்டுபிடிக்கச் சொன்னால் ஜோசியம் கேட்டு யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
இந்த அனைத்துப் புகார்கள் அடங்கிய மனுவையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளதாகவும், இந்த விவகாரங்கள் தொடர்பாகத் தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளரை நேரில் அழைத்து ஆளுநர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
