நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய லைன் அப் குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி, நாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்துப் பலரின் மனதில் இடம் பிடித்தவர். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து அசத்தக் கூடியவர். அந்த வகையில் இவர் கடைசியாக ‘பத்தா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்ததாக, இவரது நடிப்பில் ‘இஞ்சி வெல்லம்’, பாக்கெட் நாவல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இந்தப் படங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெயின்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதி படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தொடர்பான புரொமோஷன் பணிகளில் மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், ‘ட்ரெயின்’ படத்திற்குப் பிறகு உங்களின் அடுத்தடுத்த லைன்-அப் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் தற்போது இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறேன். அடுத்ததாக இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடிக்கிறேன். அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கிறேன். மேலும், ‘ஃபார்ஸி சீசன் 2’ படப்பிடிப்பையும் தொடங்கிவிட்டோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
‘ட்ரெயின்’ படத்தைத் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கும் மெகா ப்ராஜெக்ட்கள்…. விஜய் சேதுபதி கொடுத்த அப்டேட்!
-
- Advertisement -
