உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அவதார்’ திரைப்படத்தின் நான்காம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அவதார் 4’ திரைப்படத்தைத் தனது வரவிருக்கும் படங்களின் வெளியீட்டுப் பட்டியலில் டிஸ்னி நிறுவனம் சேர்த்துள்ளது. இதன்படி, இப்படம் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

மீண்டும் பண்டோரா உலகம்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘அவதார்’ திரைப்படம் உலக சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 2022-ஆம் ஆண்டு ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படமும், மூன்றாம் பாகமாக ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படமும் வெளியானது.
இந்தப் படங்கள் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் நவீன விஷுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்பத்தால் ரசிகர்களைக் கவர்ந்தன. இருப்பினும், அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள் காரணமாக அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்ற கேள்வி எழுந்து வந்தது.
2029-ல் ‘அவதார் 4’, 2031-ல் ‘அவதார் 5’
இந்நிலையில், அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்ற டிஸ்னி நிறுவனத்தின் நிகழ்ச்சியில், ‘அவதார் 4’ திரைப்படம் வரவிருக்கும் படங்களின் பட்டியலில் இடம்பெற்றது.
அதன்படி, ‘அவதார் 4’ திரைப்படம் 2029-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதியும், ஐந்தாம் பாகமான ‘அவதார் 5’ திரைப்படம் 2031-ஆம் ஆண்டு டிசம்பர் 19-ஆம் தேதியும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த அறிவிப்பு அவதார் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வெளியீட்டுத் தேதிகள் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்குவாரா?
‘அவதார் 4’ திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்குவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எதிர்காலப் படங்களின் தயாரிப்புச் செலவுகளைக் குறைத்து, குறைந்த காலத்தில் உருவாக்குவது குறித்து அவர் ஏற்கெனவே பேசியிருந்தார்.
மேலும், தாம் நம்பும் மற்றொரு இயக்குநரிடம் எதிர்காலத்தில் பொறுப்புகளை ஒப்படைக்கலாம் என்றும் அவர் முன்பு தெரிவித்திருந்தார். இதனால் நான்காம் பாகத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீடிக்கிறது.
ரூ. பல ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்பட வரிசை
‘அவதார்’ திரைப்பட வரிசையின் முதல் மூன்று படங்களும் உலகளவில் சுமார் 6.75 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகம் மூன்று ஆஸ்கார் விருதுகளையும் வென்றது.
இந்த நிலையில், டிஸ்னியின் வெளியீட்டுப் பட்டியலில் ‘அவதார் 4’ இடம்பெற்றிருப்பது, பண்டோரா உலகின் அடுத்தகட்டக் கதையைப் பெரிய திரையில் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.
டிஸ்னி வரலாற்றில் புதிய சாதனை படைத்த அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே டிரெய்லர்!
