Homeசெய்திகள்தமிழ்நாடுதுணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய – மாநில அரசுகளுக்குச் சம வாய்ப்பு தேவை: தமிழ்நாடு அரசுக்...

துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய – மாநில அரசுகளுக்குச் சம வாய்ப்பு தேவை: தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

-

- Advertisement -

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளுக்குச் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கழகத்தின் பொதுச்செயலாளர் சோ. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள 22 மாநிலப் பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சரும், மற்ற 21 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநரும் வேந்தர்களாக உள்ளனர்.

இந்நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவில் ஆளுநர் பிரதிநிதி, பல்கலைக்கழக மானியக் குழுத் (யுஜிசி) தலைவர் பிரதிநிதி, தமிழக அரசுப் பிரதிநிதி, பல்கலைக்கழக சிண்டிகேட் பிரதிநிதி என நான்கு பேர் இடம்பெற வேண்டும் என ஆளுநர் மாளிகை முன்மொழிந்துள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்கலைக்கழகச் சட்டங்களின்படி, 4 பல்கலைக்கழகங்களில் ஆளுநர் பிரதிநிதியும், 6 பல்கலைக்கழகங்களில் தமிழக அரசுப் பிரதிநிதியும், 11 பல்கலைக்கழகங்களில் இரு தரப்பினரின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

தற்போதைய முன்மொழிவின்படி, 6 பல்கலைக்கழகங்களில் ஆளுநர் பிரதிநிதியும், 4 பல்கலைக்கழகங்களில் தமிழக அரசுப் பிரதிநிதியும் கூடுதலாக இடம்பெறுவர்.

மேலும், 21 பல்கலைக்கழகங்களிலும் யுஜிசி தலைவர் பிரதிநிதி புதிதாக இடம்பெறுவார். இதனால் மத்திய அரசுத் தரப்பில் இரு பிரதிநிதிகளும், மாநில அரசுத் தரப்பில் ஒரு பிரதிநிதியும் இடம்பெறும் நிலை உருவாகும். இது சமமான பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும்.

எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களிலும் யுஜிசி தலைவர் பிரதிநிதியை இடம்பெறச் செய்ய வேண்டும்.

அதேநேரத்தில், தற்போது ஆளுநர் பிரதிநிதி இடம்பெற்றுள்ள 15 பல்கலைக்கழகங்களின் குழுக்களில் இருந்து அந்தப் பிரதிநிதியை நீக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளில் ஆளுநரின் பிரதிநிதி இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசுப் பிரதிநிதி இல்லாத 4 பல்கலைக்கழகங்களின் தேடுதல் குழுக்களிலும் மாநில அரசின் பிரதிநிதியைச் சேர்க்க வேண்டும்.

இதன் மூலம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் யுஜிசி பிரதிநிதி ஒருவர், மாநில அரசுப் பிரதிநிதி ஒருவர் எனச் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியும்.

இத்தகைய நடைமுறை யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றுவதுடன், இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கும் எனத் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

ஆட்சியைக் கலைக்கக் கோருவது ஜனநாயகத்திற்கு விரோதமானது; பெண்கள் பாதுகாப்பில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – மு. வீரபாண்டியன்

MUST READ