கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வயது சிறுமி கொலை
கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த மே 22-ம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் மோகன் (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
18 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்
கார்த்திக் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சம்பவம் தொடர்பாக 18 நாட்களுக்குள் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். தொடர்ந்து ஜூன் 15-ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஹரிகரன் அறிவித்தார்.
டிசம்பர் 4-ம் தேதி தண்டனை விவரம்
இருவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
