தவெக அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டின் மூலதனச் செலவினம் 11 சதவீதம் சரிந்துள்ளதாக ‘தி இந்து – பிசினஸ் லைன்’ இதழில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தியாவின் முக்கியப் பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, மூலதனச் செலவினத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், பிற மாநிலங்கள் இந்தச் செலவினத்தை அதிகரித்து வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிற மாநிலங்களில் செலவினம் அதிகரிப்பு:
மூலதனச் செலவினத்தைப் பொறுத்தவரை கர்நாடகா 51 சதவீதமும், உத்தரப் பிரதேசம் 23 சதவீதமும், ராஜஸ்தான் 21 சதவீதமும், மகாராஷ்டிரா 5 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11 சதவீதம் குறைந்துள்ளது. பிற மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு கவலை அளிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டங்கள் தொடங்கப்படவில்லையா? :
கடந்த ஐந்து மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள்கூட, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பணிகளுக்கானதாக இருக்கக்கூடும் என்றும், தற்போதைய அரசு புதிய பணிகளை மேற்கொள்ளாத நிலை வெளிப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சாலைகள், குடிநீர் வசதிகள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் மூலதனச் செலவினம் முக்கியமானதாகும்.
இந்தச் செலவினம் குறையும்போது, அதன் பாதிப்புகளைப் பொதுமக்களே அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுக்கு எழுப்பப்பட்டுள்ள முக்கியக் கேள்விகள்:
தமிழ்நாட்டில் மட்டும் மூலதனச் செலவினம் 11 சதவீதம் குறைந்ததற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் மூலதனப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை எந்தெந்தத் துறைகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவரை எத்தனை புதிய பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன அல்லது ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன? எந்தெந்தத் துறைகளில் செலவினம் தேக்கமடைந்துள்ளது? அந்தத் தேக்கத்துக்கான காரணங்கள் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?:
ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்களில் எத்தனை பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளன? அவை தொடங்கப்படாததற்கான காரணங்கள் என்ன? அந்தப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகளுக்கும் அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
உண்மை நிலையை விளக்க வேண்டும்:
மூலதனச் செலவினம் என்பது வெறும் கணக்கீடு மட்டுமல்ல; மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் தீர்மானிக்கும் முக்கியமான முதலீடாகும்.
எனவே, தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மூலதனச் செலவினச் சரிவுக்கான காரணங்கள், துறைவாரியான நிதிச் செலவின விவரங்கள், புதிய திட்டங்களின் நிலை ஆகியவற்றை அரசு உடனடியாக வெளியிட்டு மக்களிடம் உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
