திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்துள்ளனர்.

பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பதற்காகத் தர்காவுக்குச் செல்லக் குவிந்தனர்.
விவரங்கள் சேகரித்த காவல்துறை:
இதையடுத்து, இன்று காலை 6.15 மணிக்குப் பிறகு காவல்துறையினர் அங்கு வந்திருந்தவர்களை வரிசையாக நிற்க வைத்து, ஒவ்வொருவரின் விவரங்களையும் சேகரித்தனர்.
தொடர்ந்து, தீவிரப் பாதுகாப்புப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவர்கள் மலை உச்சிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பலர் செல்ல ஏற்பாடு:
முதற்கட்டமாகப் பரிசோதனை முடிக்கப்பட்டவர்கள் தர்காவுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்வதற்காக மலை உச்சிக்குச் செல்ல உள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் நிலவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், தர்காவுக்கு வருபவர்களின் விவரங்களைச் சரிபார்த்து காவல்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர்.
