Homeசெய்திகள்தமிழ்நாடு"2011 சென்சஸ் பேராபத்தை முறியடித்தோம்; வாளும் கேடயமும் எங்களுக்குத் தெரியும்": மசோதா ஆதரவுக்கு மு.க. ஸ்டாலின்...

“2011 சென்சஸ் பேராபத்தை முறியடித்தோம்; வாளும் கேடயமும் எங்களுக்குத் தெரியும்”: மசோதா ஆதரவுக்கு மு.க. ஸ்டாலின் அதிரடி விளக்கம்

-

- Advertisement -

“எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பது திமுகவுக்குத் தெரியும். அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் காப்பதில் திமுக வெற்றி பெற்றுள்ளது” என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் சாரம் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவை உணர்ச்சிவசப்படாமல், தொலைநோக்குப் பார்வையுடன் திமுக அணுகியுள்ளதாக அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையிலான மாற்றத்தைத் தடுத்தோம்!

தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக முன்வைத்த இரண்டு முக்கியக் கோரிக்கைகளும் உறுதி செய்யப்பட்டிருப்பதைத் தங்களுக்குக் கிடைத்த வெற்றியாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

திமுக இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால், 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மாற்றப்பட்டிருக்கும் என்றும், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால், தற்போதைய மசோதாவில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாமல் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அம்சமும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் தென் மாநிலங்கள் அனைத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரலில் மசோதாவை எதிர்த்தது ஏன்?

கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்டபோது, மாநிலங்களுடன் எந்தவிதமான ஆலோசனையும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திமுக குற்றம்சாட்டியது.

இதன் காரணமாகவே அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவைத் தோற்கடிக்கும் நிலைப்பாட்டை எடுத்ததாகக் கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது தமிழ்நாட்டின் தொகுதிகளின் எண்ணிக்கையும், நாடாளுமன்றப் பிரதிநிதித்துவமும் குறையாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை திமுக எடுத்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“வாளும் கேடயமும் எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது தெரியும்!”

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதைப் போல, எப்போது எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் திமுகவே தீர்மானிக்கும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எப்போது வாள் எடுக்க வேண்டும், எப்போது கேடயம் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்” என்ற அவரது கருத்து, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை விளக்கும் முக்கியமான அரசியல் செய்தியாக அமைந்துள்ளது.

மேலும், திமுக எம்.பி.க்கள் இந்த முடிவுக்கான காரணங்களை உறுதியாகவும் வெளிப்படையாகவும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸின் விமர்சனம் அரசியல் ரீதியானது – ஆ. ராசா

இதற்கிடையே, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆரம்பம் முதலே திமுக சரியான அணுகுமுறையுடன்தான் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

திமுகவின் தற்போதைய நிலைப்பாட்டை காங்கிரஸ் விமர்சிப்பது அரசியல் ரீதியான கருத்து மட்டுமே என்றும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் இடையிலான கருத்து வேறுபாடு மேலும் தீவிரமடைந்துள்ளது.

மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் தாரைவார்த்தது தமிழக அரசு! முதல்வர் மௌனம் காப்பது வரலாற்றுத் துரோகம் – மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!

MUST READ