காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் வண்ண மலர்களால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
ராஜகோபுரத்தில் 75 அடி நீளமுள்ள பிரம்மாண்ட மலர் மாலை அணிவிக்கப்படுவதுடன், ‘ஓம்’, ‘மயில்’, ‘வேல்’ உள்ளிட்ட வடிவங்களில் பிரத்யேக மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (நவம்பர் 29) அதிகாலை மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக சுமார் 15 டன் மலர்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்திப் பூக்கள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறச் செண்டுப்பூக்கள் உள்ளிட்ட உள்நாட்டு மலர்களுடன், ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஊதா மற்றும் நீல நிற மலர்களும் அலங்காரப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன.
சுமார் 70 பணியாளர்கள் இரவு பகலாகப் பணியாற்றி, கோயில் வளாகத்தில் மலர்களைக் கொண்டு கண்கவர் வடிவங்களை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக, ‘ஓம்’, ‘மயில்’, ‘வேல்’ மற்றும் ‘குமரக்கோட்டம்’ ஆகிய வடிவங்கள் மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கோயிலின் பிரம்மாண்ட ராஜகோபுரத்தை அலங்கரிக்கும் வகையில் 75 அடி நீளமுள்ள மலர் மாலையும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் முழுவதும் வண்ணமயமாகக் காட்சியளிக்கும் வகையில் நடைபெற்று வரும் இந்த மலர் அலங்காரப் பணிகள் பக்தர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
