
பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்ற விரைவு ரயில் ஒடிஷா அருகே தடம் புரண்டது. பாஹாநாகா ரயில் நிலையம் அருகே ஹவுரா ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஹவுரா ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் விரைவு ரயில் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் இருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!
ரயில் விபத்தில், இதுவரை 233 பேர் உயிரிழந்துள்ளனர்; 900- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரத், சரோ ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் நேற்று இரவு முதல் விடிய, விடிய விமானப்படையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகளில் உள்ளூர் பகுதி வாசிகளும், பொதுமக்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
தடம் புரண்ட ரயில் பெட்டிகள் எவை எவை?
இந்த நிலையில், ஒடிஷா ரயில் விபத்து காரணமாக, இன்று (ஜூன் 03) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை முதலமைச்சர் திறந்து வைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நடக்கவிருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும், கருணாநிதி நினைவிடம், கருணாநிதி சிலைக்கு மரியாதைச் செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.