காய்கறி விலை உயர்வு- ஒன்றிய அரசு தலையிட வேண்டும்: அமைச்சர் பெரியகருப்பன்
சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு சந்தை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கிவைத்தார். பொதுமக்கள் இருக்கும் இருப்பிடங்களுக்கே பொருட்கள் சென்றுசேர கூட்டுறவு சந்தை செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “காய்கறி, மளிகை பொருள் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தலையிட வேண்டும். தமிழ்நாட்டில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வதை வேறு மாநிலத்தவர்களும் பாராட்டி வருகின்றனர். இந்தியா முழுவதும் தக்காளி விலை அதிகரித்துதான் காணப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர இதர மாநில முதலமைச்சர்கள் தக்காளியை குறைந்த விலையில் விற்பதில் கவனம் செலுத்தவில்லை. தமிழ்நாட்டில் தக்காளி விலையை இன்னும் கூட குறைக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.


தக்காளி விற்பனையை மேலும் பல கடைகளுக்கு விரிவுப்படுத்தக்கூடிய சாத்தியகூறுகளும் உள்ளது. ஒரே நேரத்தில் எல்லா கடைகளிலும் விற்பனையை ஆரம்பித்தால் தக்காளி விற்பனை செய்வது இல்லாமல் போய்விடும். தற்போது 3 மாநகராட்சிகளில் குறைந்த விலையில் தக்காளி விற்கும் திட்டம் மற்றா மாநகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். தக்காளியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பதுக்கல் என்பது இல்லை. அதனால் நடவடிக்கைக்கு தேவையில்லை. பண்ணை பசுமை அங்காடி, ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது, புது முயற்சி மக்களுக்கு எந்த அளவுக்கு பலன் தருகிறது என்பதை ஆய்வு செய்து விரிவாக்கம் செய்யப்படும்” என்றார்.