30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ள டி.சி.எஸ் நிர்வாகத்தை கண்டித்தும், ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு மற்றும் ஐ.டி ஊழிய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தனது உலகளாவிய பணியாளர்களில் 2% பேரை, இந்தியாவில் மட்டும் 30,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதிக்கும் பணிநீக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை கண்டித்துள்ள இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ), மற்றும் ஐ.டி ஊழியர் சங்க அமைப்பும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. திறன் மேம்பாடு என்ற பெயரில், 20–25 ஆண்டுகளாக உழைத்து வந்த மூத்த பணியாளர்களை குறிவைத்து, அவர்களை நீக்கி, 80–85% குறைவான ஊதியத்தில் புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் ஜூனியர் மயமாக்கலை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் குரல் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐடி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெல்கின், பன்னிரண்டாயிரம் ஊழியர்களை பணி நீக்கம் என்று அறிவித்த டி.சி.எஸ். நிறுவனம் தற்போது 30,000 மேற்பட்ட ஊழியர்களை பெஞ்ச் என்று சொல்லப்படும் காத்திருப்பு நிலையில் வைத்துள்ளது. இதன் மூலம் ஸ்கில் டெவலப்மென்ட் மற்றும் திறமை இன்மை என பல்வேறு காரணங்களால் எந்த முன்னறிவிப்பு இன்றி அவர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான வழிவகை செய்துள்ளது.
இதில் உடனடியாக அரசு தலையிட்டு பணிநீக்க நடவடிக்கை கைவிட வலியுறுத்த வேண்டும். மேலும் ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இதே நிலைத்தொடர்ந்தால் இந்த திட்டத்தை பின்பற்றி மற்ற நிறுவனங்களும் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.டி நிறுவனங்களை முறைப்படுத்தவும், தொழிலாளர் சட்டத்தை முறையாக பின்பற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நஸ்காம், அரசு மற்றும் தொழிற்சங்கம் என முத்தரவு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார்.
கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாக களமிறங்கும் பிரபல நடிகர்!