மதுரையில் அனுமதி பெறாத பேனர்கள் மற்றும் கொடிக் கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற மதுரை கிளை ஐ கோா்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு திடலில் 100 அடி கொடிக்கம்பத்தை த.வெ.கவினர் நிறுவ முயன்ற போது ராட்சத கிரேனில் இருந்த கயிறு அறுந்ததால், கீழே விழுந்தது. இதில் அருகில் இருந்த ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கார் நொறுங்கியது. அதிா்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால், உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவத்தின் விளைவாக மதுரையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடி கம்பங்களை ஒரு மணி நேரத்தில் உடனடியாக அகற்ற வேண்டும் என மதுரை கிளை ஐ கோா்ட் உத்தரவு வழங்கியுள்ளது. பேனர்கள் கொடி கம்பங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவதற்கு ஒரு மணி நேரம் அவகாசமும், அனுமதி பெறாத பேனர்களை அகற்ற ஒரு மணி நேரம் கெடுவும் மதுரை கிளை ஐ கோா்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும், மதுரையில் தற்போது ஏராளமான கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் உள்ளன அவற்றை உடனடியாக ஆய்வு செய்ய தயார் எனவும் நீதிபதிகள் கூறினா். பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளதா? என கண்காணித்து அறிக்கை அளிக்க மதுரை காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனா். இது தொடா்பாக நாகையை சேர்ந்த அருளரசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் அரசியல் கட்சிகள் வைத்துள்ள பேனா்கள், பதாகைகள் பொது மக்களுக்கு இடையூறு என மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.